வியாழன், 1 நவம்பர், 2018

​மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! November 1, 2018

Image

மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி நிர்வாகத்தில் பா.ஜ.க அரசு தலையிடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னாட்சி அதிகாரம் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் “ஏழாவது பிரிவை” பயன்படுத்திட முயலும் மத்திய அரசின் செயல், ஜனநாயகப் படுகொலை என கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்  ரகுராம் ராஜனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வெளியேற்றியதுபோன்று, தற்போதைய ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் வரலாறு காணாத நெருக்கடி அளிப்பதால், அவரும் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவும்,  ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அந்தஸ்து சீர்குலைக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ள போதிலும், நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், “கார்ப்பரேட் முதலாளிகளை” காப்பாற்றவும் மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வது மிகுந்த வேதனையளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தங்கள் தோல்விகளை மறைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.