சனி, 13 ஜூலை, 2019

100 ஏக்கர் வனத்தை உருவாக்கிய தனி மனிதன்! July 13, 2019


மரம் வளர்ப்பது சர்வதேச அளவில் மிக முக்கியமானதொரு இயக்கமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தனி மனிதர் ஒருவர் ஒரு வனத்தையே உருவாக்கியிருக்கிறார். அது யார், அந்த வனம் எங்கே இருக்கிறது தெரியுமா?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையடிவார வளையாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர், இயற்கை மீது கொண்டிருந்த தீராத காதலைப் பார்த்த ஆரோவில் நிர்வாகத்தினர் புதுச்சேரியின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஊசுட்டேரி அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் வெற்று நிலமாகக் கிடந்த 100 ஏக்கர் நிலத்தை வனத்தை உருவாக்குவதற்காக ஒப்படைத்தனர். 1989-ம் ஆண்டு முதல் உலர் வெப்ப மண்டலக் காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சரவணன் மழைநீரைச் சேமித்து வனம் உருவாக தன் வாழ்வை உரமாக்கியுள்ளார். அதன் பலனாக தற்போது பச்சை போர்வை போர்த்தியது போல பரந்து விரிந்து காட்சியளிக்கும் இந்த வனத்திற்கு ஆரண்யா வனம் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
 
இந்த வனத்திற்கு உள்ளே குயில்களின் ஓசைகளும், பறவைகளின் இனிமையான சத்தங்களும் நம் செவிகளுக்கு விருந்து படைக்கின்றன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மர வகைகளும், மாங்குயில், மயில், கொண்டாலத்தி, பல்வகையான புறா உள்ளிட்ட 240 பறவை வகைகளும் 40-க்கும் மேற்பட்ட வன விலங்குகளும் இந்த வனத்தில் உல்லாசமாக திரிகின்றன. 
ஆரண்யா வனத்தை உருவாக்கிய சரவணன், தமது மனைவி மற்றும் மகளுடன் அந்த காட்டிலேயே ஒரு வீட்டை கட்டி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார். இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கு தொடக்கத்தில் சிரமமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது இந்த வனத்தை விட்டுச் செல்ல மனமில்லை என்றும் கூறுகிறர் சரவணனின் மனைவி.

தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரின்றி கடும் வறட்சியை சந்தித்து வரும் நிலையில், இயற்கை நம்மை வஞ்சிக்காமல் இருக்க மரம் வளர்ப்பு முக்கியமானதொரு பணியாக கருதப்படுகிறது. அந்த வகையில் சரவணன் தேசத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்றால் மிகையில்லை. 

credit ns7.tv