credit ns7.tv
]
]
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாததால், உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் சிலரின் தகுதி நீக்க வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறி, ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக சபாநாயகர் கூறுவதை ஏற்க முடியாது என வாதிட்டார்.
நாளை மறுநாள் கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் ஏன்? நடவடிக்கை எடுக்கவில்லை என, நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு, ராஜினாமா கடிதத்தின் பின்னணியை ஆராய வேண்டிய கடமை உள்ளதாக, சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன அதிகாரங்களை சபாநாயகர் ஏன் பின்பற்றவில்லை என வினவினர். இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து முடிவெடுக்க நாளை வரை சபாநாயகர் தரப்பில் கால அவசாகம் கோரப்பட்டது.
இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கவிருப்பதால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.