credit ns7.tv
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்?, என்பது தொடர்பாக ராகுல் காந்தி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு, தானே பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது, என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கட்சியின் எதிர்கால வளர்ச்சியே மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள் அதன் இலக்கை எட்டிவிட்டன என்றும், நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் கூட நடுநிலைமையை இழந்துவிட்டன என்றும், ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக அமைப்பு பலவீனமாகி விட்டது என்றும், அதனை காப்பாற்ற வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் ஆதரவு தெரிவித்த கட்சியினருக்கு நன்றி என்றும், மாற்று தலைவரை தேர்வு செய்வது காங்கிரஸ் கட்சிக்கு அவசியம் என்றும், ராகுல் காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.