வியாழன், 4 ஜூலை, 2019

சென்னை குடிநீர் பிரச்சனை குறித்த கிரண்பேடியின் கருத்துக்கு அதிமுக கண்டனம்! July 04, 2019

ns7.tv
Image
நிழல் அரசை நடத்துபவராக தன்னை காட்டிக்கொள்ளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னுடைய அதிகார மூக்கை புதுச்சேரி மாநில எல்லையோடு நிறுத்துக்கொள்ள வேண்டும் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகுமுறையும் கூட வறட்சிக்கு காரணமாக உள்ளதாகவும் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்வினையாக,  எல்லைக்கடக்கும் தொல்லை என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் பத்தி செய்தி வெளியாகியுள்ளது.
அதில்,  மக்களால் அமைக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு முரணாகவும் செயல்படும் கிரண்பேடி, தமிழக அரசின் திட்ட விவரங்களைத் தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், விமர்சிப்பது சுலபம், விடை சொல்வது கடினம் என்பதை உணராதோர் போல், தமிழகத்து அரசியல் தலைவர்கள் மீது பழிப்போட்டு, ட்விட்டர் பதிவிடுவது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
அவ்வாறு இல்லாமல், முறையற்ற விமர்சனத்தை கிரண்பேடி தொடர முயற்சிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும்  நமது அம்மா நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.