மேற்குவங்கத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக அக்கட்சியின் தலைவர் முகுல் ராய் கூறியுள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து பல மாநிலங்களிலும் அரசியல் சூழல் மாற்றத்தை சந்தித்து வருகிறது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ல் பாஜகவும், தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஒரு தொகுதியில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு ஆளும் காங்கிரஸ், மஜத கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சிங் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். அவரை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் காங்கிரஸ், மஜத கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா கடிதம் அளித்தனர். சுயேட்சைகளும் தாங்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டனர். குமாரசாமியின் அரசு அந்தரத்தில் ஊசலாடியபடி இருந்து வருகிறது.
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தற்போது உச்சநீதிமன்றம் வரையிலும் சென்றுள்ள நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் திடீரென
பாஜகவுடன் இணைந்தனர். இதன் மூலம் சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலம் 15 ல் இருந்து 5ஆக குறைந்துள்ளது.
கர்நாடகா, கோவா மாநில அரசியல் சூழல் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் மேற்குவங்கத்தில் இன்று புதிய அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளார் பாஜகவின் முகுல் ராய்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளில் வென்று திரும்பிப் பார்க்க வைத்தது பாஜக. ஆளும் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்ற தொகுதிகளை விட 4 இடங்களே இது குறைவானதாகும்.
மேற்குவங்கத்தில் பாஜக வலுவடைந்துள்ள நிலையில் முன்னாள் எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான முகுல் ராய் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பட்டியல் தயாராகிவிட்டதாகவும், எங்களுடன் எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும் முகுல் ராய் தெரிவித்தார். இதன் மூலம் கர்நாடகா, கோவாவை தொடர்ந்து மேற்குவங்கத்திலும் பாஜக ஆழமாக கால்பதிக்க இருப்பதாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
தேர்தல் தோல்வியால் துவண்டு போயுள்ள மமதா பானர்ஜிக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் கர்நாடகம் போலவே மேற்குவங்கத்திலும் அரசியல் சதுரங்கம் தொடங்க உள்ளது.
credit ns.7tv