நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடந்தது
சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் கதர்த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதாகவும், அதிமுகவால் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் தவறான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசியல் வரலாற்றில் அதிகமுறை தோல்வியடைந்த கட்சி திமுக எனவும், அதேநேரம் அதிக முறை ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக எனவும் தெரிவித்தார். தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், ஆனால், அந்த அளவிற்கு இங்கு பணம் உள்ளதா எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த திமுக உறுப்பினர் சுந்தர், அதிமுக வெற்றி பெற்ற தேனி தொகுதியை உள்ளடக்கிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது என்றும், அடுத்து நடக்கவுள்ள வேலூர் மக்களவை தேர்தலிலும் திமுகவே வெற்றிக்கொடி நாட்டும் எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், திமுகவினரை பல ஆண்டுகள் கோட்டைப்பக்கமே தலைகாட்டவிடாமல் செய்தவர் எம்.ஜி.ஆர் என ஆவேசமாக தெரிவித்தார்.
இதனால் திமுக உறுப்பினர் சுந்தரும் ஆவேசமடைந்து உங்கள் தலைவர் ஜெயலலிதா 1996 தேர்தலில் தோல்வியை தழுவியவர் எனவும் ஆனால், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி தேர்தலில் தோல்வியையே தழுவாதவர் எனவும் பதிலடி கொடுத்ததால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
credit ns7.tv