credit ns7.tv
சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி (32 வயது ) என்பவர், கூகுள் நிறுவனத்தில் தான் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு, ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்து வருகிறார்.
குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தற்போது சாலைகளில் மட்டுமல்லாமல் நீர்நிலைகளிலும் தேங்கி நின்று, அதில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது. நிலங்களில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு சிலர் முன்வரும் நிலையில், நீர்நிலைகளை பற்றி பலர் கண்டுகொள்வதில்லை.
அதனால், குளம், ஏரி போன்ற நீர் ஆதாரங்களை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார் சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி. இவர், ஒரு தன்னார்வ அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இந்த சேவையை செய்துவருகிறார். இதுவரை இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் 93 ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்துள்ள இவரது அமைப்பு மேலும், பல நீர் ஆதாரங்களை சுத்தமாக்கும் முயற்சியில் களமிறங்கி அசத்தி வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று ஏரி, குளங்களை சுத்தம் செய்யும் இவர்களுக்கு, ஸ்ரீராம் குழுமம், முருகப்பா குழுமம் போன்ற தனியார் நிறுவனங்களும் உதவி செய்கின்றன. குளங்களை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில், சைக்கிளில் சில இடங்களுக்கு பயணம் செய்து சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் இந்த சேவை அமைப்பு நடத்திவருகிறது.
தற்போது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் தங்களது சேவையை செய்து வரும் இவர்கள், கூடிய விரைவில் விஜயவாடா, மைசூர், கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும் தொடங்க உள்ளதாக அருண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சிறுவயதில் மரங்கள், குளங்களுக்கு மத்தியில் வாழ்ந்த வாழ்க்கையே தற்போது தன்னை இந்த முயற்சியில் ஈடுபட தூண்டுகோளாக இருந்தது என நெகிழ்ச்சியாக தெரிவிக்கிறார் அருண் கிருஷ்ணமூர்த்தி. இவரின் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.