வியாழன், 15 ஆகஸ்ட், 2019

பெஹ்லு கான் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது ராஜஸ்தான் நீதிமன்றம்! August 14, 2019


Image
பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் நிரபராதிகள் என்று கூறி ராஜஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பெஹ்லு கான் என்பவர்  பால்  வியாபாரத்திற்காக ஜெய்ப்பூர் சந்தையில் வாங்கிய மாடுகளை வாகனத்தில் ஏற்றி தனது மகன்கள் இர்ஷத், ஆரிப் மற்றும் சில பணியாளர்களை  அழைத்துக்கொண்டு ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.  ஆல்வார் மாவட்டம், பெஹ்ரார் பகுதியில் அவர்களை வழிமறித்த பசு பாதுகாப்பு படையினர்  வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, இர்ஷத், ஆரிப், பெஹ்லு கான் உள்ளிட்ட அனைவரையும் கடுமையாக தாக்கியது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த 55 வயது பெஹ்லு கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 3ம் தேதி பெஹ்லு கான் அளித்த வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்கள் என 6 பேரின் பெயரை காவல்துறையினரிடம் தெரிவித்தார். எனினும், ஏப்ரல் 4ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் பெஹ்லுகான் உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இதனைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்றன.
இதனையடுத்து, பெஹ்லு கானின் வாக்குமூலம் மற்றும் தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விபின் யாதவ், ரவீந்திர குமார், கலுராம், தயாராம், யோகேஷ் குமார், பிம் ரதி ஆகிய 6 பேர் மீதும் இந்திய தண்டனைப்பிரிவு 143(சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல்), 323(வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது), 341, 302, 308, 379(திருட்டு) மற்றும் 427(சொத்துகளை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜூன் 2017ல் இந்த வழக்கின் மீதான விசாரணை சிஐடி-சிபி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிஐடி-சிபி காவல்துறையினர், பசு பராமரிப்பு மையத்தை பராமரித்து வந்தவர் அளித்த வாக்குமூலம் மற்றும் செல்போன் தரவுகளின் அடிப்படையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றமற்றவர்கள் என்று அறிவித்தனர். அதோடு 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட 6 பேரிடம் ஆல்வார் நீதிமன்றம் விசாரணை செய்துவந்தது. மீதி இரண்டு பேர் இந்த சம்பவம் நடைபெற்றபோது 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அவர்களிடம் சிறார் நீதிமன்றம் விசாரணை செய்துவந்தது.
பின்னர், இந்த வழக்கின் மீதான விசாரணை பெஹ்ரார் நீதிமன்றத்திலிருந்து ஆல்வார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆழ்வார் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட பிறகு  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 44 சாட்சியங்களிடம் விசாரணை செய்த நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்டு 7ம் தேதி முடித்து வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று ஆழ்வார் மாவட்ட கூடுதல் நீதிபதி அறிவித்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம் பெஹ்லு கான் மகன்கள் மீதும், ட்ரக்கை வாடகைக்கு கொடுத்த கான் முகமது மீதும் விலங்குகள் வதை, தற்காலிகமாக இடம்பெயர்தல் மற்றும் ஏற்றுமதி தடைச்சட்டம் 1995-ன் கீழ் 5,8,9 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கான் முகம்மது மீது அதே சட்டப்பிரிவு 6ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு, அவர்களிடம் மீண்டும் ஆரம்பம் முதல் விசாரணை செய்யவேண்டும் என்று ஆல்வார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட காவல்துறை ஜூன் 11ம் தேதி அதற்கான அனுமதியைப் பெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை ராஜஸ்தான் ஆல்வார் நீதிமன்றம் இன்று அறிவித்தது. அந்த தீர்ப்பில் பெஹ்லு கான் தாக்கப்படுவதாக காட்டப்படும் காணொளி ஏற்றுக்கொள்ளக் கூடிய சான்றாக இல்லை. எனவே சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளிப்பதாகக் கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக ஆழ்வார் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ள பெஹ்லுகான் குடும்பத்தினர், இந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

credit ns7.tv