சனி, 1 ஆகஸ்ட், 2020

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகமுழுவதும் உள்ள 185 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சரவதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்தியாவில் சர்வதேச விமானங்கள் இயக்கவும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனிடையே வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டுவரும் வகையில் ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் மட்டும் உலக நாடுகளுக்கு மத்திய அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒப்பந்த அடிப்படையில் பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விமானங்களும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கொரோனா காரணமாக சர்வதேச விமானப்போக்குவரத்துக்கு ஏற்கனவே ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அந்த தடை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..இது தொடர்பாக விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திட்டமிடப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையின் இடைநீக்கத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தடை, பிரான்ஸ், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மூலம் இயங்கும் பயணிகள் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.