சனி, 1 ஆகஸ்ட், 2020

தமிழக டிஜிபி பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் ஊடகங்களின் முன் நிறுத்தப்படுகிறார்களா என்பது குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்க  மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு  மனித உரிமை ஆணையத்தில், பஞ்சாப்பை சேர்ந்த வழக்கறிஞர் நிகில் சராஃப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவிக்கும் முன்னர் உரிய விதிகளை பின்பற்றாமல் அவரை குற்றவாளி போன்று ஊடகத்தின் முன் காவல்துறையினர் நிறுத்துவதாகவும் இது சட்டத்திற்கு விரோதமானது எனவும் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக, நீதிமன்றங்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும், எனவே  குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் ஊடகங்கள் முன் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை விசாரணைக்கு ஏற்ற மாநில மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து தமிழக டிஜிபி 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.