சனி, 1 ஆகஸ்ட், 2020

கள்ளச் சந்தையில் கொரோனா சிகிச்சை மருந்துகள்: மருத்துவர்களும் உடைந்தையா?

கொரோனா  சிகிச்சையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படும்  ரெம்டெசிவிர் மருந்தின் விலை, சென்னையில் மூன்று மடங்கு அதிகரித்து விற்கப்படுகிறது.

ரூ .3,000 முதல் ரூ .5,000 வரை (ஜி.எஸ்.டி உட்பட) செலவாகும் ஒரு குப்பியின் விலை, ‘கருப்பு’ வழி பரிமாற்றங்கள் (சந்தை) காரணமாக ரூ .12,500 முதல் ரூ .13,000 வரை அதிகரித்து விற்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கொரோனா பெருன்தொற்றுக்கான மருத்துவமனை சார் சிகிச்சை மேலாண்மை நடைமுறைத் தொகுப்பில், அவசரகால நோக்கங்களுக்காக மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை,  பரிசோதனைக்கால சிகிச்சையாக பயன்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்த ரெம்டெசிவிர் மருந்தை அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம். அதேசமயம் இந்த மருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனா இறப்பு விகிதங்களை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர், டாசிலிசுமாப்  போன்ற மருந்துகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மருத்துவமனையில் மருந்துகள் கிடைக்கப் பெறாத நிலையில், மருந்தை வெளியில்  இருந்து கொண்டு வர நோயாளிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர். ‘கருப்பு’ வழி பரிமாற்றங்களுக்கு தேவையான உதவிகளை ( ஏஜென்ட் முகவரி, தொலைபேசி எண்) சில மருத்துவர்களே செய்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா மேலும் தெரிவித்தது.

திருச்சியில் உள்ள ஒரு கோவிட் -19 நோயாளி,  தான் சிகிச்சைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனையில்  ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால், ஏஜென்டின் மூலம்  ஆறு குப்பிகளை ரூ .75,000 கொடுத்து வாங்கியுள்ளார்.    இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் சி என் ராஜா, தமிழ்நாடு சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு இந்த விசயத்தை கொண்டு சென்றதாக  டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்தது.

ரெம்டெசிவிர் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்காக சிடிஎஸ்சிஓ அமைப்புக்கு மெஸ்ஸர்ஸ் ஹெட்டிரோ, மெஸ்ஸர்ஸ் சிப்ளா, மெஸ்ஸர்ஸ் டிபிஆர், மெஸ்ஸர்ஸ் ஜுபிலியண்ட், மெஸ்ஸர்ஸ் மைலான் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய 6 இந்திய கம்பெனிகள் விண்ணப்பித்துள்ளன. இதில் 5 கம்பெனிகள் மெஸ்ஸர்ஸ் கிளீட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை சிடிஎஸ்சிஓ அமைப்பானது முன்னுரிமை அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி பரிசீலித்து வருகிறது.

தமிழ்நாடு மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் கே.சிவபாலன் இது குறித்து கூறுகையில், ” இதுவரை எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. ரெம்டெசிவிர்  மருந்து இன்னும் பொது விற்பனைக்கு வரவில்லை. எனவே,  மருந்தை  பொதுமக்கள் நேரடியாக அணுக முடியாது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தான் மருந்து  கிடைக்கின்றது. நோயாளிகளுக்கு நேரடியாக விற்க எந்த வழியும் இல்லை. எனினும், குறிப்பிட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

இந்திய மருந்து ஒழுங்குமுறை ஏஜென்சியான சிடிஎஸ்சிஓ அமைப்புக்கு ரெம்டெசிவிர் மருந்தை இறக்குமதி செய்து விற்பதற்காக மெஸ்ஸர்ஸ் கிளீட் நிறுவனம் 29 மே 2020இல் விண்ணப்பித்து இருந்தது. பரிசீலனைக்குப் பிறகு அவசரக்காலப் பயன்பாட்டு அனுமதி என்பதன் கீழ் 1 ஜுன் 2020இல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோயாளியின் பாதுகாப்பு மற்றும் கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதாக சிடிஎஸ்சிஓ தெரிவித்தது.