தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஆங்காங்கே பலத்த மழை முதல் வெகு கனத்த மழை பெய்யலாம் என்றும், தமிழ்நாட்டின் கணவாய்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகமிக கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும், கோவை, தேனி, மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”என்று தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் தேவலா 34, பந்தலூர் 19, ஹாரிசன் 18, அவலாஞ்சி 11, நடுவட்டம், கூடலூர் பஜார் தலா 8 , மேல் பவானி 7,மேல் கூடலூர் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடேலார பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 09.08.2020 இரவு 11.30 மணி வரை உயர் கடல் அலைகள் 3.5 முதல் 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இன்றைய முக்கிய வானிலை அம்சங்கள்:
நன்கு உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு முகமாக நகர்ந்து, தற்போது வடமேற்கிலும் அதை அடுத்துள்ள அரபிக்கடலின் வடகிழக்குப் பகுதியிலும் நிலைகொண்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் மழை குறைந்துள்ளது.
பருவமழை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Monsoon trough) தொடர்ந்து சுழற்சியில் உள்ளது.
அரபிக்கடல் பகுதியிலும், மேற்குக் கடலோரத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் தென்படும் வலுவான தென்மேற்கு/ மேற்குப் பருவமழை (southwesterly/westerly monsoon flow) தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டலத்தின் கீழ் நிலைகளில் காணப்படும்.