சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் கொண்ட சிபிஐ குழு, வழக்கறிஞர் மணிமாறன் மற்றும் பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரணை நடத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது மரணம் தொடர்பாக ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ அதிகாரிகள் 4 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகிய நிலையில் நேற்று மீண்டும் சாத்தான்குளத்திற்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள், வழக்கறிஞர் மணிமாறன் மற்றும் ஜெயராஜ் நண்பர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஜூன் 19ம் தேதி கடை மற்றும் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தினர்.