தமிழகத்தில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல இடங்களில், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணை 97அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றபட்டது. நேற்று 22,000 கன அடிதண்ணீர் வரை வெளியேற்றபட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுறன்டு ஓடுகிறது.
நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்குப் பிறகு நொய்யலில் இருகரைகளையும் தொட்டபடி, வெள்ளம் சீறிப்பாய்கிறது. இந்த நீர் முழுவதும் ஆங்காங்கே இருக்கும் தடுப்பணைகள் மூலம் குளங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. போத்தனூர் ஜம்ஜம்நகர் அருகே உள்ள நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட லேசான உடைப்பால் போத்தனூர் சாய்நகரில் உள்ள 10 தெருக்களுக்குள் வெள்ளம் புகுந்தது. 60 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த இரு நாட்களில் 5 அடி உயர்ந்து 120 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 4 ஆயிரத்து 784 அடியிலிருந்து தற்போது 6ஆயிரத்து 585 அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு தற்போது 600 கன அடியிலிருந்து 933 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 2,346 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 75 அடியை எட்டியது. இதேபோல், சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 91.04 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்வரத்து 5 ஆயிரத்து 836 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, 65 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி அணை ஒரு சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.