செவ்வாய், 31 ஜூலை, 2018

இந்தியர்களுக்கு மறுக்கப்படும் ஹெச் ஒன் பி விசா! July 31, 2018

Image

ஹெச் ஒன் பி விசா மற்ற நாடுகளை சேர்ந்தவர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு அதிகளவில் மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹெச் ஒன் பி விசா மூலம் நிறுவனங்கள், சிறப்புப் பணிகளுக்குத் திறன் வாய்ந்த அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு அந்தப் பணியிடங்களை நிரப்ப முடியும். இந்தப் பணியாளர்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்றலாம். தேவை பட்டால் விசாவை நீட்டிக்கவும் முடியும். 

இந்நிலையில் அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி பணியாற்றுவதற்கு ஹெச் ஒன் பி விசா வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்டினரை ஒப்பிடுகையில், இந்தியர்களுக்கு மட்டும் இந்த விசா வழங்கும் போது கூடுதல் ஆதார சான்றுகளை அமெரிக்கா கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், ஹெச் ஒன் பி விசா நிராகரிக்கப்படுவோர் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது

முழு கொள்ளளவை எட்டவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை! July 31, 2018

Image

ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை, முழு கொள்ளளவை விரைவில் எட்டவுள்ளது. இதனால் எந்த நேரமும் அணை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் “ஆரஞ்சு” வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையானது கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குறவன் மற்றும் குறத்தி என்ற 2 மலைகளை இணைத்து ஒரு அரைவட்டம் போல பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த இடுக்கி அணையானது, ஆசியாவில் உள்ள வளைவு அணைகளில் மிகப்பெரியது என்ற பெருமைக்கு சொந்தமானதாகும். 

கேரள மின்வாரியத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற அணைகளின் ஆயுள்காலம் 100 ஆண்டுகளாக உள்ள நிலையில், இடுக்கி அணையின் ஆயுள்காலம் மட்டும் 300 ஆண்டுகளாக விளங்குகிறது. கடந்த 1969ஆம் ஆண்டில் இந்த அணையின் கட்டுமான பணிகள்  தொடங்கப்பட்டு, 1973ஆம் ஆண்டு வரை 4 நான்கு ஆண்டுகள் பணிகள் நடைபெற்றன.

மதகுகள் இன்றி இந்த அணை கட்டப்பட்டதில் இருந்து 1981-ம் மற்றும் 1992-ம்  ஆகிய இரு ஆண்டுகள் மட்டுமே அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் 26  ஆண்டுகள் கழித்து இடுக்கி அணை மீண்டும் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் இடுக்கி அணை முதன்முறையாக நிரம்பவுள்ளது. இதனால், எந்நேரமும் இடுக்கி அணை   திறக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இடுக்கி அணை பகுதியில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்காக செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகள் உள்ளன. இதில், இடுக்கி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் செருதோனி அணைக்கு செல்கிறது. அங்கிருந்து தான் 5 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும். முதல்கட்டமாக, 40 சென்டி மீட்டர் அளவுக்கு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, விநாடிக்கு ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர் பெரியாறு  
ஆற்றில் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்போது, அலுவா உள்ளிட்ட பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைக்குழுவினர் முன்னெச்சரிக்கை  பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டும் செல்லும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அணை நீர்மட்டம் 2400 அடியை எட்டும்போது, தண்ணீரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இடுக்கி அணை திறக்கப்படுவதை ஒட்டி முப்படைகளின் உதவியையும் கேரள அரசு கோரியுள்ளது. இந்திய கடலோரக் காவல் படையினரின் படகுகள், விமானப்படையின் இரு ஹெலிகாப்டர்கள்  உள்ளிட்டவை மீட்புப்பணிக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 395 அடியை எட்டிய நிலையில் கரையோர மக்களுக்கு ஆரஞ்ச் வெள்ள அபாய எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது, நீர்மட்டம் 2 ஆயிரத்து 397 அடியை எட்டும்போது, குறிப்பிட்ட நேரங்களுக்கு ஒருமுறை அணையில் இருந்து தண்ணீர்  திறக்கப்படும் எனவும், இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் ஆராயப்பட்டு அதற்கேற்ப தண்ணீரை திறக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை! July 31, 2018

Image

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமியும், உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் ஒரு சிறுமியும் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

இந்த நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வ தற்கான மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு, குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.

12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்பவர்களுக்கு, 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ராகுல்காந்தி இன்று சென்னை வருகை! July 31, 2018

Image

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.

உடல்நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வரும் அவர், 4 மணிக்கு காவேரி மருத்துவமனை வர உள்ளதாக கூறப்படுகிறது

முணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குழுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்! July 31, 2018

Image

மலைவாசஸ்தலமான மூணாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்திருக்கும் மூணார், சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து வருகிறது. 

‘தென்னகத்து காஷ்மீர்’ என அழைக்கப்படும் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ள மூணாரில் வருடந்தோரும் இதமான சீதோஷன நிலை நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

நீலக்குறிஞ்சி:

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி எனப்படும் நீலக்குறிஞ்சி மலர்கள் மூணார் மலைப் பகுதியில் பூக்கத் தொடங்கியுள்ளன. மூணாரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா பகுதியில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

பச்சை நிறத்தில் பசுமையாக காட்சியளித்து வந்த மூணார் தற்போது குறிஞ்சி மலர்களால் ஊதா வண்ண நிறத்தில் காட்சியளிக்கிறது. முன்னதாக 2006ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கிய நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்தப் பூக்கள் பூத்துள்ளன. இந்த அரிய காட்சியை காண 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
 
3,000 ஹெக்டேர் பரப்பரளவில் பரந்து விரிந்துள்ள மூணார் மலைப்பகுதிக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் செல்லவது உகந்ததாகும்.  வரும் அக்டோபர் வரை குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கும் என கூறப்படுகிறது. 

குறிஞ்சி மலரின் சிறப்புத் தன்மை:

30 முதல் 60 செ.மி உயரம் கொண்ட குறிஞ்சி மலர் செடிகள் மலரத் தொடங்கிய பின்னர் இறந்து விடும் என்றும் அதில் இருந்து விழும் விதைகள் மீண்டும் முளைத்து செடியாகி அதில் இருந்து மலர்கள் பூக்க 12 ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மூணாரில் மாட்டுப்பட்டி அணை, ரோஸ் கார்டன், கார்மேலகிரி யானை பூங்கா, குந்தலா அணை,  பொத்தமேடு வியூ பாயிண்ட், மறையூர் சந்தன காடுகள், லக்கன் நீர் வீழ்ச்சி, அட்டுக்கல், ராஜமலை, இரவிகுளம் தேசிய பூங்கா, தேவிகுளம், டாப் ஸ்டேஷன் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.

வன்மங்களின் கூடாரமாகிறதா வலைதளங்கள்! July 31, 2018

Image

சமூகவலைதளங்களில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி கடந்த சில தினங்களாக வன்மங்களை கொட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். உண்மையில் இது போன்ற வக்கிரமங்கள் எப்படிப்பட்டது? திமுக தொண்டர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பற்றிய முழு விவரம். 

இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி. உடல் நலிவுற்றுள்ள அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வலைதளங்களில் எழும் கருணாநிதிக்கு எதிரான சர்ச்சைகள்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்பப்பட்டாலும், அவரது மறைவை தமிழகத்தின் பேரிழப்பாகவே பார்த்தனர் அனைத்துக்கட்சி தொண்டர்களும்.

தற்போது கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவர் மீதான, ஏற்றுக்கொள்ள முடியாத விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகிறது ஒரு தரப்பு. தேசிய அளவில் தமிழகத்தை தலைநிமிர செய்த முக்கிய தலைவர்களில் ஒருவரான கருணாநிதி நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் மீது விமர்சனம் என்ற பெயரில் வக்கிரங்களை கொட்டி கொண்டிருக்கிறது ஒரு தரப்பு.

கருணாநிதியின் உடல்நலகுறைவை கொண்டாடுவது போன்ற பதிவுகளை ஒரு சாரார் பதிவிடத் தொடங்கினர். சமூகவலைதளங்களின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய காலகட்டத்தில், அது மனித உணர்வுகளை கொட்டும் இடமாகவே இருந்தது. ஆனால் இன்று அது வக்கிரங்களை கொட்டும் இடமாக மாறிவிட்டதா என எண்ண தோன்றுகிறது ஒரு சிலரின் செயல்கள். 

கருணாநிதி யாருக்கு எதிராக போராடினாரோ அவர்கள் விமர்சிப்பதை திமுகவினர் கண்டிப்பாக எதிர்பார்த்திருப்பார்கள் ஆனால் அவர் யாருக்காக திட்டங்களை கொண்டு வந்தாரோ அவர்களில் ஒரு கூட்டம் அதனை பணியாகவே செய்து வருகிறது. 

ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இது போன்ற விமர்சனங்களை செய்கிறார்கள் என்ற தகவல் பரவிய போது, அதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார் சீமான். தமிழகத்தின் மூத்த தலைவர் கருணாநிதியை பற்றி தவறான விமர்சனங்களை முன்வைப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் சீமான்.

ஆனாலும் வசவுகள் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதன் எதிரொலியாக நேற்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கைது செய்துள்ளது காவல்துறை

ஒரு புறம் கருணாநிதியின் புகழ்பாடும் பணிகளில் திமுகவினர் ஈடுபட்டாலும், மறுபுறம், இது போன்ற விமர்சனங்களால், எரிச்சலும் கோபமும் அடைந்துள்ளனர் திமுக தொண்டர்கள்

தனது வலைதளப்பக்கத்தில் வந்த விமர்சனங்களை கூட நீக்க வேண்டாம் என அட்மின்களுக்கு உத்தரவிட்டவர் கருணாநிதி. ஒரு வேளை தற்போது கருணாநிதி நினைவோடு இருந்திருந்தால், இது போன்ற விமர்சனங்களை எளிதாகவே கடந்திருப்பார் என்பது திமுக அபிமானிகளின் கருத்தாக இருக்கிறது உண்மையில் கருணாநிதி அவரது தொண்டர்களுக்கு கற்று கொடுத்திருக்கும் பாடமும் அதுதான்

source: 
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/31/7/2018/web-sites-are-tabernacle-hardships

மலையில் இருந்து இறங்க வழி தெரியாமல் 2 நாட்கள் தவித்த ரஷ்ய பயணி மீட்பு! July 30, 2018

Image

திருவண்ணாமலை மலை மீது ஏறி, கீழே இறங்க வழி தெரியாமல் 2 நாட்களாக தவித்து வந்த ரஷ்ய சுற்றுலா பயணியை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். 

ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு சுற்றுளா வரும் வெளிநாட்டினர் சிலர் திருவண்ணாமலை மலை மீது ஏறி சென்று சுற்றிப் பார்க்கின்றனர். 

இந்நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் என்னும் சுற்றுளாப் பயணி திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்துள்ளார்.  அப்போது அவர் திருவண்ணாமலை மலையின் மீது ஏற முயற்சித்துள்ளார். சிறிது தூரம் ஏறிய அவர் ஒரு கட்டத்துக்கு பிறகு கீழே இறங்க வழி தெரியாமல் தடுமாறினார்.

இந்நிலையில் அலெக்சாண்டர் உடன் வந்த பெண் நிக்கா, மலையின் மீது ஏறிய அலெக்சாண்டர் திரும்பவில்லை என திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து 16 போலீசார், நான்கு வனத் துறையினர் உட்பட 20 பேர் அடங்கிய குழு அலெக்சாண்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மலையின் தென்மேற்கு பகுதியிலிருந்த அலெக்சாண்டரை 2 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். 

ஆளுநரின் உத்தரவை கிழித்து எரிந்த கெஜ்ரிவால்! July 30, 2018

Image

டெல்லியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, ஆளுநர் அமைத்த குழுவின் அறிக்கையை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிழித்தெறிந்தார்.

 டெல்லியில் அரசு மற்றும் பொதுஇடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக, துணை நிலை ஆளுநர் பைஜால், குழு ஒன்றை அமைத்திருந்தார். இந்த குழு சில பரிந்துரைகளை அளித்திருந்தது. 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் கெஜ்ரிவால்,  இந்த பரிந்துரைகளை வாசித்து காட்டினார். பின்னர் அந்த அறிக்கையை மேடையிலேயே கிழித்தெறிந்தார். கண்காணிப்புக் கேமரா பொருத்த காவல்துறையின் அனுமதி அவசியமில்லை என்று குறிப்பிட்ட  கெஜ்ரிவால், டெல்லி நகரமெங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் பெருமளவில் குற்றங்கள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்  .

பொது மேடையில் கெஜ்ரிவால் நடந்துக் கொண்ட விதத்தால் டெல்லி முதல்வர் - ஆளுநர் இடையேயான மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

திங்கள், 30 ஜூலை, 2018

TRAI தலைவர் வங்கிக்கணக்கில் ஒரே ஒரு ரூபாயை டெபாசிட் செய்த ஹேக்கர்! July 30, 2018

Image

TRAI தலைவர் வங்கி கணக்கில் ஒரே ஒரு ரூபாயை ஹேக்கர்கள் டெபாசிட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை எனக் கூறி வந்த, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு, மர்மநபர் ஒருவர் ட்விட்டரில் சவால் விடுத்தார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சர்மா, தமது ஆதார் எண்ணை பதிவிட்டார். மேலும் அவர், “தமது ஆதார் எண்ணை வைத்து ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் செய்து காட்டுங்கள்” என சவால் விடுத்தார். 

இதையடுத்து, சர்மா தமது ஆதார் எண்ணை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏலியட் ஆல்டென்சர் என்னும் ஹேக்கர், டிராய் தலைவர் சர்மா குறித்த முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். இதுதவிர, அவரது வாட்ஸ் அப் முகப்பு புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். 

இந்நிலையில் ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் வங்கி கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்து அதனை புகைப்படம் எடுத்தும் ஹேக்கர்கள் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஆதார் எண் மூலம் டிராய் தலைவரின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளிவந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமையான UIDAI, சர்மாவின் தகவல்கள் ஆதாரின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா: 15 வயதிலேயே பொறியியல் பட்டம் வென்று சாதித்த இந்திய வம்சாவளி சிறுவன்! July 29, 2018

Image

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அமெரிக்காவில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான்.

தனிஷ்க் ஆப்ரஹாம் என்ற 15 வயது சிறுவன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பயோமெடிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

இளம் வயது முதலே படிப்பில் மிகவும் சிறந்து விளங்கியவராக திகழ்ந்த தனிஷ்க், எண்ணற்ற பிரிவுகளில் இணையங்களில் போட்டித் தேர்வுகளை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார்.

மிக இளம் வயதிலேயே, தனது வயதைத் தாண்டிய கல்வியறிவு பெற்றிருந்ததால் 11 வயதிலேயே UC Davis எனப்படும் கலிஃபோட்னிய பல்கலைக்கழகத்தில் சேர வாய்ப்பு பெற்றார். தற்போது 15 வயதில் தனது பொறியியல் பட்டப்படிப்பை சிறந்த நிலையில் நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார். 

மேற்கொண்டு Phd எனப்படும் பட்ட மேற்படிப்பை தொடர விண்ணப்பம் செய்து அசத்துகிறார் தனிஷ்க்.

மாணவர் தனிஷ்கின் சாதனை குறித்து அவரின் குடும்பத்தினர் பூரிப்படைந்துள்ளனர்.  இவரின் தாயார் கால்நடை மருத்துவர் ஆகவும், தந்தை மென்பொருள் வல்லுனர் ஆகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கர்கள் மத்தியில் சிறுவன் தனிஷ்கின் சாதனை இந்தியா குறித்த நன்மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எவ்வளவு தெரியுமா? July 30, 2018

Image

இந்தியாவில் கடந்த 64 ஆண்டுகளில் வெள்ளத்தில் சிக்கி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கடந்த 1953 ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 64 ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த காலக் கட்டத்தில் வெள்ளத்தால்,  2 லட்சத்து 2 ஆயிரத்து 474 கோடி ரூபாய் அளவிற்கு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

25 புள்ளி 6 கோடி ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்ட, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 202 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள், வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,654 பேரும், 92 ஆயிரத்து 763 கால்நடைகளும் உயிரிழந்தாக, மத்திய  நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1953-ம் ஆண்டிற்கும் 2017ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட 64 ஆண்டுகளில் அதிகபட்சமாக 1977-ம் ஆண்டு 11 ஆயிரத்து 316 பேர் உயிரிழந்துள்ளனர்.  

1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி, நாடெங்கிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

போலி ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களை திருடிய மர்ம மனிதன் July 30, 2018

போலி வங்கி ஆப்கள் மூலம் தனியார் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடிய மர்ம மனிதன் பற்றிய செய்தி வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மக்களின் பணம் பல்வேறு வகைகளில் கொள்ளையடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பம் மூலம் புதிது புதிதாக மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ் பெற்ற தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, ஆர்.பி.எல் மற்றும் எச்.டி.எப்.சி ஆகிய வங்கிகளின் போலி ஆப் மூலம் வாடிக்கையாளருக்கு தங்களின் கிரெடிட் கார்டுகளில் உள்ள தொகையை அதிகப்படுத்தி தருவது போல குறுஞ்செய்தி அனுப்பி, ஆப்பை டவுண்லோடு செய்யும் லிங் அனுப்பப்படுகிறது.



அந்த போலி ஆப்பை டவுண்லோடு செய்தவுடன் வாடிக்கையளர்களின் விவரங்களை பெறும் வகையில் இரு படிவங்கள் திரையில் தோன்றுகிறது. பின்னர் அனைத்து விதமான கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ரகசிய வங்கி தகவல்கள் பெறப்படுகிறது. இதனை தொடர்ந்து “எங்களது வங்கி ஊழியர்கள் உங்களை விரைவில் தொடர்புகொள்ளுவார்கள்” என உறுதி செய்யும் செய்தி இறுதி திரையில் வருகிறது.  இவை அனைத்தும் முடிந்தவுடன் அந்த கார்டில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நூதன தகவல் மற்றும் பணத் திருட்டு பற்றி சமீபத்தில் அந்தந்த வங்கிகள் மூலம் தெரியவந்துள்ளது. உடனடி நடவடிக்கையாக கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி ஆப்கள் நீக்கப்பட்டுவிட்டதாக வங்கிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கிறது. 



மேலும் இந்த போலி ஆப்களை யார் யார் இயக்குவது என்று கண்டறிய திட்டமிட்ட நிலையில், வங்கி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியுள்ளது. இந்த மூன்று வங்கிகளின் போலி ஆப்களும் ஒரே நபரால் வேறு வேறு பெயர்களில் நிறுவப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போலி ஆப்கள் அதிகாரப்பூர்வ ஆப்கள் போல தெரிவதற்கு 100-க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மூலம் முன்னதாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.



கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த போலி ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் உலா வந்துள்ளது. எனினும் இந்த நூதன தகவல் திருட்டில் பாதிக்கப்படோர் பற்றிய தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து போலி மற்றும் அபாயகரமான ஆப்களை தனது தளத்தில் இருத்து நீக்கி வரும் கூகுள் நிறுவனம் வங்கிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. தொடரும் இதுபோன்ற நூதன தகவல் திருட்டுகளால் அச்சமடைந்துள்ள மக்களுக்கு இது போன்ற செய்தி மேலும் ஒரு இடியாக இருக்கும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி July 30, 2018


Image

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின்  வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை சுருக்கமாக காணலாம்..

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு, கடந்த 1886ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ம் தேதி மகளாக பிறந்தார் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்புக்கு சொந்தகாரராக விளங்கினார்.

சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினராகவும், சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர், சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர் என பல பதவிகளை முதல் பெண்மணியாக அலங்கரித்தவர் முத்துலட்சுமி. தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, பால்ய திருமணங்களுக்கு தடை போன்ற சட்டங்களை நிறைவேற்றிய பெருமையும் இவரை சாரும். 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1926-ம் ஆண்டு நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று பெண்ணடிமைக்கு எதிராக வலுவாக குரல்கொடுத்தார். இவரின் சமூக பணிகளை பாராட்டி மத்திய அரசு "பத்மபூஷண்' விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசும் இவரது பெயரில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்து வெற்றி பெற்ற முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, பெண் சமூக முன்னேற்றத்தின் ஊன்றுகோல் என்றால் அது மிகையாகது.








சிக்குகிறாரா மெகுல் சோக்ஸி? ஆண்டிகுவா அரசிடம் உதவி கோரிய இந்தியா! July 30, 2018

Image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹14,356.84 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்நாட்டு அரசாங்கத்தின் உதவியை இந்தியா நாடியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் போலியான உத்தரவாத கடிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் அளித்து அதன் மூலம் ₹14,356.84 கோடி ரூபாயை மோசடி செய்த விவகாரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த மோசடி விவகாரம் வெளியில் தெரிவதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நீரவ் மோடி, அவரின் மனைவி ஏமி மோடி, சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவரின் மாமா மெகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர்.

இதில் முக்கிய நபரான நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மெகுல் சோக்ஸி கரீபிய தீவு நாடான Antigua and Barbuda-வில் இருப்பதாக பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவுத் துறையினர் மெகுல் சோக்ஸி நிலம், நீர், ஆகாயமார்க்கமாக எங்கும் தப்பிச் செல்லாதவாறு தடுக்குமாறு கேட்டுக்கொண்டது.

கடந்த ஆண்டே கரீபிய தீவு நாடான Antigua and Barbuda-வில் குடியுரிமை பெற்றுவிட்டதாக மெகுல் சோக்ஸி கடந்த வாரம் தெரிவித்ததாக வெளியான தகவலையடுத்து இந்திய அரசு இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 132 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 29 ஜூலை, 2018

​துபாயில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு! July 29, 2018

Image

துபாய் நாட்டில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

துபாய் அரசின் இஸ்லாமிய சமய அறநிலையத்துறை சார்பில் இந்த திருவிழா நடைபெற்றது. இதில், அரபி, ஜெர்மன், ஸ்பானிஷ், ருமேனியா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மொழி, மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சியில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ் அரங்கில் தமிழ் மொழியின் வரலாறு, வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்கள்ன் பண்பாட்டு பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் 2-ஆவது பரிசு பெங்காலிக்கும், 3-ஆவது பரிசு எத்தியோப்பியாவுக்கும் வழங்கப்படது.

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பின்தங்கி உள்ளதாக ஆய்வில் தகவல்! July 28, 2018

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தாலும், இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் பின்தங்கி உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் இண்டர்நெட் பயன்பாடு குறித்து 39 நாடுகளில் Pew என்ற ஆய்வு மையம் சார்பில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் உலகளவில் இரண்டிலும் தென்கொரியா முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் 22 சதவீதம் பேர் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல் ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 51 சதவீதமாக இருப்பதாகவும், செல்போன் பயன்படுத்தாமல் இருப்போர் எண்ணிக்கை 26 சதவீதமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும், இது சில ஆப்பிரிக்க நாடுகளை விட குறைவாக உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இதேபோல் 18 முதல் 36 வயதுடைய நபர்கள் 35 சதவீதம் பேரும், 37 வயதுக்கு மேற்பட்டோர் 13 சதவீதம் பேர் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


​உலக அளவிலான பளுதூக்குதல் போட்டியில் பங்குபெற நிதியுதவி கோரும் ஏழை மாணவி! July 28, 2018


Image

தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக அளவிலான சப்-ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்க தனக்கு, நல்ல உள்ளங்கள் நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என, ஏழை மாணவி லோகப்பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த லோகப்பிரியா அண்மையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவில் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் 18வது உலக சப்-ஜூனியர் மற்றும் 36வது ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 

எனினும் போதிய வசதியில்லாததால், ஏழை மாணவியான லோகப்பிரியாவின் நிலை பற்றி நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக, மதுரை தனியார் மருத்துவமனை ஒரு லட்சம் நிதியுதவி வழங்கி லோகப்பிரியாவை ஊக்கப்படுத்தியது. அதனை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பளுதூக்குதல் வீராங்கனை லோகப்பிரியா, நியூஸ் 7 தமிழுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 


SOURCE: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/28/7/2018/poor-student-asking-fund-participate-world-level-weight-lifting

விதைப் பண்ணை மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு! July 29, 2018

Image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருந்த விதைப் பண்ணை, மூடப்பட்டதால் 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

செங்கத்தை அடுத்த மேல்செங்கம் பகுதியில் மத்திய மாநில விதை பண்ணை செயல்பட்டு வந்தது. பசுமை பூத்துக் குலுங்கிய பூஞ்சோலை ஆசியாவிலேயே இரண்டாவது புகழ் பெற்ற பண்ணை

வீரியம் மிக்க விதைகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த பண்ணை இது எல்லாம் கடந்த கால கதை. தற்போதைய நிலையோ தலைகீழ், இந்த விதைப்பண்ணை மூடப்பட்டுள்ளதால், இதனை நம்பி வேலை செய்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் க்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று கூறுகின்றார் அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்.

விதைப் பண்ணை மூடப்பட்டுள்ளதால், இதில் வேலை செய்த தொழிலாளர்கள், மாற்று வேலைக்காக வெளி மாநிலங்களில் அண்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மண்ணுக்கு தகுதியற்ற, விவசாய நிலங்களை பாழ்படுத்தக் கூடிய நீலகிரி மரங்கள் இங்கு நடப்படுவதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயம் அழியும் சூழல் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

அத்துடன் விதைப்பண்ணையை மூடியதால், இங்கு அமைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள், 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் பாழடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, மீண்டும் விதைப் பண்ணையாகவோ, விவசாய கல்லூரியாகவோ மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், மூடப்பட்டது விதைப் பண்ணை மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் அவற்றை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான எதிர்பார்ப்பு.

இறந்த மகளின் நினைவாக 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வரும் கிளார்க்! July 29, 2018

Image

தன்னுடைய இறந்த மகளின் நினைவாக தான் பணியாற்றி வரும் பள்ளியில் உள்ள 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார் கிளார்க் ஒருவர்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் உள்ள மக்டம்புரா பகுதியில் உள்ளது MPHS அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவிகளின் கல்விச் செலவை அதே பள்ளியில் பணியாற்றி வரும் கிளார்க் ஒருவர் ஏற்றுள்ளார். இந்த ஆண்டு அவர்களின் பள்ளிக் கட்டணத்தை அவரே செலுத்தியுள்ளார்.

பசவராஜ் என்ற அந்த கிளார்கின் மகளான தானேஸ்வரி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரின் நினைவாக அவரின் பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 45 பேரின் கல்விச் செலவை ஏற்றுள்ளதாக பசவராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அப்பள்ளியில் படித்து வரும் பாத்திமா என்ற மாணவி கூறுகையில், பசவராஜ் அவர்கள் அவரின் மகளின் நினைவாக ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும் என் போன்ற மாணவிகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளார். அவரின் மகளின் ஆண்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.

கிளார்க் பசவராஜின் இச்செயலை பள்ளி மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நேரு, இந்திரா காந்தியின் பெயரால் இனிமேலும் காங்கிரஸால் ஓட்டுகளை பெற இயலாது - ப.சிதம்பரம் July 29, 2018

Image

எதிர்வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிற்கு தயாராகும் வகையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்காக பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்தும் வகையில் ‘சக்தி’ என்ற பெயரிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்ட தொடக்க விழாவில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஒரு காலத்தில் தேர்தல் நேரத்தில் ஜவஹர்லால் நேரு அல்லது இந்திரா காந்தி பெயரை கூறினால் மட்டும் போதும், லட்சக்கணக்கான பொதுமக்கள் பூத்களுக்கு வந்து காங்கிரஸுக்கு ஓட்டு போடுவர்.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை, நேரு - இந்திரா காந்தியின் பெயரால் இனிமேலும் காங்கிரஸால் ஓட்டுகளை வாங்க இயலாது என்றார் ப.சிதம்பரம்.

ஒரு கட்டத்தில் சவால் விடுக்க முடியாத அரசியல் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது, ஆனால் இன்று அப்படி இல்லை.

தற்போது 2 கட்சிகள் மட்டுமே தேசிய அளவில் தடம் பதித்துள்ளன. ஒன்று காங்கிரஸ் மற்றொன்று பாஜக. மேலும் பிராந்திய அளவிலான அரசியல் கட்சிகள் எண்ணிக்கையும் அதிகரித்து முக்கிய பங்காற்றி வருகின்றன என தெரிவித்தார்.

பாஜக நம்மை ஏமாற்ற அனுமதிக்காதீர்கள், பாஜகவின் கொள்கையான காங்கிரஸ் அல்லாத தேசம் என்பதை எப்போதும் அவர்களால் உருவாக்க முடியாது என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ப.சிதம்பரம் பேசினார்.

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு ஹேக்கர் சவால்! July 29, 2018

Image

பிரதமர் மோடியின் ஆதார் நம்பரை கேட்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது இணையவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் தகவல்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (TRAI) தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ட்விட்டர் கணக்கில் தன் ஆதார் எண்ணை பதிவிட்டு இதன்மூலம் தனக்கு யாராவது தீங்கு விளைவிக்க முடியுமா என்பது போல சவால் விட்டிருந்தார்.

அவர், பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹேக்கர் எல்லியட் ஆல்டெர்சன் என்ற நபர், ஆர்.எஸ். ஷர்மாவின் சொந்த விவரங்களான அவரது தொலைபேசி எண், வாட்ஸ் அப்பில் அவர் வைத்திருந்த புகைப்படம், சிலருடன் chat செய்த தகவல், வீட்டு முகவரி, PAN எண் போன்றவற்றை பதிவு செய்தார். ஆர்.எஸ் ஷர்மா தனது G-Mail Password-ஐ மாற்ற வேண்டும் என்று தெரிவித்த அவர், ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து பல்வேறு நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள், ஷர்மாவின் சொந்த தகவல்களை கண்டுபிடித்து, அதனை பதிவு செய்திருந்தனர். ஆதார் எண்ணை பயன்படுத்தி, ஒருவரது தகவல்களை எளிதில் எடுத்துவிடலாம் என்பதற்கு சான்றாக இந்த ட்விட்டர் கருத்து பதிவேற்றம் இருக்கிறது என்று இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஆதார் தகவல்கள் திருடப்படவில்லை:

இந்நிலையில் ஆர்.எஸ் ஷர்மாவின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதில் உண்மை இல்லை என்றும், அவை அனைத்தும் இணையத்தில் எளிதில் கிடைக்க கூடிய தகவல்களே என்றும் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகப்பாக உள்ளதாகவும் அவை ஹேக் செய்யப்படவில்லை என்றும் உறுதியளித்தார்.

ஆர்.எஸ் ஷர்மாவின் ஆதார் கனக்கு விவரங்களை ஹேக் செய்ததாக கூறிக்கொள்ளும் எல்லியட் ஆல்டெர்சன், பிரதமர் மோடியை தனது ஆதார் நம்பரை வெளியிடும் படி ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




source:
http://ns7.tv/ta/tamil-news/india/29/7/2018/hacker-asks-pm-modi-aadhar-number

பாகிஸ்தான் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்க தலைவன் ஹஃபீஸ் சயீதின் கட்சி! July 29, 2018

Image

பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மும்பை தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீது-வின் ஆதரவு பெற்ற கட்சி ஒரு இடத்தில் கூட வெல்ல இயலாமல் அந்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. வாக்களிப்புக்குப் பின்னர் நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சி மொத்தமுள்ள 270 தொகுதிகளில் 116 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளின் துணையோடு அக்கட்சி ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே இத்தேர்தலில் ஜமாத்-உத்-தாவா எனும் பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹஃபீஸ் சயீதின் ஆதரவுடன் Allah-o-Akbar Tehreek என்ற கட்சி போட்டியிட்டது. ஹஃபீஸ் சையதின் மகனான ஹஃபீஸ் தால்ஹா சயீது மற்றும் மருமகன் காலீத் வாலீத் ஆகியோர் உட்பட குடும்பத்தினர் சிலரும் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி பயங்கரவாதி ஹஃபீஸ் சையதின் ஆதரவு பெற்று களமிறங்கிய Allah-o-Akbar Tehreek கட்சி மோசமான தோல்வியை சந்துத்துள்ளது. ஒரு இடத்தில் கூட வெல்ல குடியாத அக்கட்சி மொத்தமாகவே 1,71,441 ஓட்டுகளையே பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டுகளை கூட பெறத் தவறியுள்ளனர். ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே 45,000 வாக்குகள் பெற்றுள்ளார். அவரும் கூட வெற்றி இலக்கிலிருந்து மிகவும் பின் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர் தான் இந்த ஹஃபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-க்கு முன்பாக இம்ரான் கான் பிரதமர் பதவியை ஏற்பார் என தகவல்கள் கூறுகின்றன.

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்த 17 வயது இந்திய சிறுமி! July 29, 2018

Image

ஆப்ரிக்கா நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில்  ஏறி சாதனை படைத்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த 17 வயது சிறுமி சிவாங்கி பதாக். சிறுவயதில் இருந்தே வித்தியாசமான விஷயங்கள் செய்வதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். எவரஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறிய பெண் அருணிமா சின்ஹாவின் வீடியோக்களை பார்த்து, மலை ஏற்றத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

பின்னர், கடும் முயற்சி செய்து மலை ஏற்றம் செய்வதை கற்றுக்கொண்டார். 3 நாட்களில் ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு தனது பெற்றோர் மிகவும் உதவி செய்ததாகவும் ஒரு பெண்ணால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று சிவாங்கி தெரிவித்தார்.

இவர், எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய பெண்களிலேயே மிகவும் இள வயது உடையவர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சனி, 28 ஜூலை, 2018

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் ரஃபேல்: பாஜகவிற்கு எதிராக ஊழல் ஆயுதம்! July 28, 2018

Image

ரபேல் விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது காங்கிரஸ் ஒரு நிறுவனம் தொடங்கி 12 நாட்களில் ரபேல் விமான ஒப்பந்தம் போடப்பட்டது ஏன் என அந்த கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அவர்களுக்கு எதிராக பாஜகவினர் எடுத்த ஒற்றை ஆயுதம் ஊழல் அதே ஆயுதத்தை தற்போது கையிலெடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி ஆம், அமித்ஷா மகன் நிறுவனம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய லாபத்தை பெற்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக அமித்ஷா தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது என பாஜகவை நோக்கி குற்றச்சாட்டுகளை வீசி கொண்டிருக்கிறது காங்கிரஸ். இதற்கெல்லாம் உச்சமாக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை கையிலெடுத்துள்ளது காங்கிரஸ்.

போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. இந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல்-10ம் தேதி போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது காங்கிரஸ். 

ரபேல் விவகாரம் சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறையல்ல. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு வேண்டியவர்கள் பலனடைந்துள்ளனர் என நாடாளுமன்றத்திலேயே முழங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

பிரதமரின் கட்டளையின் பேரில் நிர்மலா சீத்தாராமன் பொய் கூறுகிறார் என ராகுல் கூற நாடாளுமன்றத்தில் பூகம்பமே வெடித்தது. அதன் பின்னர் ராகுல் குற்றச்சாட்டை நிர்மலா சீத்தாராமன் ஆதாரங்களுடன் மறுத்தாலும் அந்த சர்ச்சை மட்டும் ஓய்ந்தபாடில்லை.

மோடி ஏழைகளுக்காக உழைக்கவில்லை மாறாக தனக்கு வேண்டிய ஒருசில பெருமுதலாளிகளுக்காக உழைக்கிறார் என தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே ரபேல் விவகாரத்தை கையாள்கிறது காங்கிரஸ் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. 

ரபேல் விவகாரத்தில் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களின் விதிமுறைகள் ஒட்டுமொத்தமாக மீறப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து. இந்த ஒப்பந்தத்தில் விதிமுறை மீறப்பட்ட நிலையிலும் கூட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தத்தையும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தணிக்கை செய்துள்ளது.

தொடரும் ரபேல் சர்ச்சைக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.


source:
http://ns7.tv/ta/tamil-news/india/28/7/2018/rafael-corrupt-weapon-against-bjp