
வதந்தியான குறுந்தகவல்கள் மூலம் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க நடவடிக்கை, Forwarded Messege எது என்பதை காட்டும் புதிய அம்சம் வாட்ஸ் ஆப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தவறான குறுந்தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைக்கடத்தல் வதந்திகளால் சிலர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்களும் நேரிட்டன. அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட வாட்ஸ் ஆப்பினால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து, மத்திய அரசு அதிருப்தி வெளியிட்ட நிலையில், இதபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், செயலியில் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் நிறுவனம் சேர்த்துள்ளது. இனி, ஃபார்வேர்டு செய்யப்படும் செய்திகளை வாட்ஸ் ஆப் செயலி காட்டிக் கொடுத்துவிடும்.
இதன் மூலம் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா ? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், தகவல்களை பரப்பும் இணைய முகவரிகள் போலியானதா? என்பதை வாட்ஸ்ஆப் தானாக கண்டறிந்து விடும். இந்த புதிய அம்சம் மூலம் செயலியில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.