ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், அது குறித்த செய்தி..
ஜூன் 30 அன்று நள்ளிரவில் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கூடியது. நள்ளிரவில் பாராளுமன்றம் கூடுவது சுதந்திர இந்தியாவில் அரிதினும் அரிதான நிகழ்வு. ஒரே தேசம், ஒரே வரி என்ற மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக GST என சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அது மாநிலங்களின் சுயாட்சியை பாதிப்பதாக இருக்கிறதென மாநிலக் கட்சிகள் குற்றம்சாட்டின, ஆனால் வணிகர்களின் தரப்பில் இன்னொரு கருத்து முன்வைக்கப்பட்டது. வரி செலுத்தும் நடைமுறைகள் மிகவும் கடினமானதாக இருப்பதாகவும் அதனால் தங்கள் வணிகம் பாதிக்கப்படும் எனவும் வணிகர்கள் கூறினர்.
இந்தக் குறைபாடுகள் கூறப்பட்ட போது ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருக்கும் குறைபாடுகள் விரைவில் களையப்படும் என மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு ஓராண்டான நிலையில் அந்தக் குறைபாடுகள் களையப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் அந்தக் குறைபாடுகள் எதுவும் களையப்படவில்லை என்கின்றனர் வணிகர்கள். வரித்தாக்கல் செய்வதிலும், வரியைத் திரும்பச் செலுத்துவதிலும் உள்ள குறைபாடுகள் அப்படியே உள்ளதாகக் கூறுகின்றனர் வணிகர்கள். ஏற்றுமதியாளர்களுக்குச் திருப்பி செலுத்தப்படும் IGSTயில் நீடிக்கும் குறைபாடுகளால் பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்ததையடுத்து,வரித்தாக்கலை திரும்பப் பெறாத ஏற்றுமதியாளர்களுக்காக 15 நாள் சிறப்பு முகாம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
மேலும் கணக்குத் தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்க அமல்படுத்தப்பட்ட GST RB3 படிவத்தின் சடப்ப்பூர்வ அங்கீகாரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் ஜிஎஸ்டி ஆர் 2, ஜிஎஸ்டிஆர் 3 ஆகிய படிவங்கள் அமல்படுத்தப்படாதது ஏன் என்றும் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது பல பொருட்கள் அதன் வரி வரையறைக்குள் வரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.ஜிஎஸ்டி வரியால் இந்தியாவின் ஜிடிபி உயர்ந்திருந்தாலும் முறையாக வரி செலுத்திய ஏற்றுமதியாளர்களுக்கு திரும்பச் செலுத்த வேண்டிய வரி தரப்படாதது உள்ளிட்ட ஜிஎஸ்டியின் நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான வணிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.