வெள்ளி, 13 ஜூலை, 2018

பாஸ்போர்ட் சரிபார்த்ததற்கு கைமாறாக பெண் பத்திரிக்கையாளரை கட்டிப்பிடிக்குமாறு கேட்ட போலீஸ்காரர்! July 13, 2018

Image

பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்த பெண் பத்திரிக்கையாளரின் வீட்டிற்கு சரிபார்த்தலுக்காக சென்ற போலீஸ்காரர் ஒருவர், அதற்கு கைமாறாக கட்டிப்பிடிக்குமாறு கேட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா கோஸ்வாமி, இவர் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். சமீபத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். இதன் காரணமாக உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து சரிபார்த்தலுக்காக போலீஸ்காரர் ஒருவர் ஸ்வேதாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் நுழைந்தது முதலே அந்த போலீஸ்காரரின் நடவடிக்கைகளில் வித்தியாசத்தை உணர்ந்தவராக இருந்ததாகவும், வேண்டுமென்றே சரிபார்ப்பு பணிகளை தாமதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஸ்வேதா, நீண்ட நேரம் கழித்து தனது பணிகளை முடித்த பின்னர், “உங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டது, இப்போது எனக்கு என்ன தருவீர்கள்?” என அந்த காவலர் கேட்டதாகவும், பின்னர் ஒரு முறை கட்டிப்பிடித்துக்கொள்ளுங்கள் என அந்த போலீஸ்காரர் கேட்டதாக பத்திரிக்கையாளர் ஸ்வேதா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
 
Safety of an applicant,especially that of a woman,during police verification for passport renewal is a big lacuna. The policeman who came for my verification just a few minutes ago in Ghaziabad made me feel pathetically uncomfortable. @SushmaSwaraj @rajnathsingh @ghaziabadpolice
தனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தை அவருடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதனை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஸ்போர்ட் சேவா துறை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் ஆகியோரின் டிவிட்டர் ஐடிக்களையும் டேக் செய்துள்ளார். அவரின் அந்த பதிவில் சம்பவத்தில் ஈடுபட்ட காவலரின் பெயர் தேவேந்திர சிங் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக உத்தரப்பிரதேச டிஜிபி அறிவுறுத்தலின் பேரில், காவலர் தேவேந்திர சிங் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வருத்தங்களை தெரிவித்துக்கொள்வதாக பத்திரிக்கையாளர் ஸ்வேதாவிற்கு உத்தரப்பிரதேச காவல்துறையினர் டிவிட்டரில் பதில் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
பாஸ்போர்ட் சரிபார்த்தலுக்கு வந்த காவலர் ஒருவரால் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது