மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால், புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஆறுகளில் கரைபுரளும் வெள்ளத்தால், பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
சாவித்ரி நதியில் வெள்ளம் அபாய அளவை தாண்டியுள்ளது. கனமழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பால்கார் மாவட்டத்தில், காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்சோட்டி அருவி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் இதுவரை 106 பேரை மீட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 36 பேர் ஆபத்தான பகுதியில் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.