பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை நகலை எரிக்க முயன்ற, விவசாய சங்க நிர்வாகி உட்பட 44பேர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சேலம் –சென்னை இடையிலான 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில், பசுமை வழிச்சாலை திட்ட அரசாணையை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சேலம் மாநகர காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.