2007ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, ராஜஸ்தான் மாநிலத்தில் 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டதாக அரசு சாரா அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆரோக்கியசித்தி என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று, தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், 2007ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டிற்குள் 48,969 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தது. கடன் தொல்லை, குடும்ப தகராறு, மன உளைச்சல், திருமண பிரச்சனை, வேலையின்மை போன்ற காரணங்களால் அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 18லிருந்து 45 வயது உடையவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்
மேலும், ராஜஸ்தான் அரசிடம், தற்கொலைகளை தடுப்பதற்கான உரிய ஆலோசனை மையங்களை அதிக அளவில் நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு 1 மணி நேரம் ஆலோசனை வழங்கினால் தற்கொலை எண்ணத்தை அவர்களிடம் இருந்து அகற்றலாம் என தெரிவித்த ஆரோக்கிய சித்தி அமைப்பின் நிறுவனர், இந்தியாவில், தற்கொலை எண்ணிக்கை 23% அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.