புதன், 1 ஆகஸ்ட், 2018

உள்நாட்டுப்போர்’ பேச்சுக்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு! August 1, 2018

Image

அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவு குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசியதற்காக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேச நாட்டை ஒட்டியுள்ள அசாம் மாநிலத்தில் என்னற்ற வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி வரைவு பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது. இதி; 40 லட்சம் பேர் பேர் வரை விடுபட்டிருந்தனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட போது இந்த விவகாரம் தொடர்பாக பேசினார்.

வங்காளதேசத்துடன் இந்தியா கொண்டிருக்கும் நட்புறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படும் என்றும், அசாம் போன்று மேற்கு வங்கத்தில் இது போன்று கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு துணிவு உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், அது போன்று நடந்தால் அது உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்றும், ரத்தக்களரி நடைபெறும் என்றும் கூறினார்.

வழக்குப்பதிவு:

மம்தாவின் இந்த பேச்சு தொடர்பாக அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் நகரின் நாஹர்காதியா காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்:

ஒரு மாநில முதல்வராக இருந்து கொண்டு, உள்நாட்டு போர் நடைபெறும் என தூண்டிவிடுவது போல் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, அசாம் ஒரு அமைதி ததும்பும் மாநிலம், இந்த விவகாரத்தால் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கண்டனம்:

மம்தா எப்போதும் ஓட்டு வங்கி அரசியல் நடத்துபவர் என்றும், நாங்கள் தேசிய நலனை கருத்தில் கொள்ளும் வேளையில், அவர் ஓட்டு வங்கியை மனதில் கொண்டு பேசிவருவதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.