விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பிள்ளையார் சிலைகளை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 13-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பிள்ளையார் சிலைகளை வைப்பதற்கு, தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, சிலைகளை வைத்து வழிபட விரும்புவோர், உதவி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்ட அதிகாரி, உதவி ஆட்சியரிடம் ஒருமாதத்திற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது இடத்தில் சிலைகள் வைக்கப்படவிருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள், களி மண்ணால் செய்யப்பட்டதாகவும், தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய இயற்கை சாயங்கள் பூசப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யப்படும் விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் தேவாலயம், மசூதி ஆகிய வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுஇடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவிய நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் மசூதிகள், தேவாலயங்கள் இருந்தால், போலீசாரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வழியில் சிலைகளை எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது. விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினிலாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும், மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதியில்லை என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.