ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

​பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என்ன? August 12, 2018

Image

கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யும் மாணவர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் 60% இடங்கள் காலியாக வாய்ப்பு அதிகம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

2000 மாவது ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை இதுவாகதான் இருக்கும். தொழிற்சார்ந்த படிப்புகளுக்கான படிப்புகள் நோக்கி மக்கள் நகர தொடங்கிய காலகட்டம் அது.

தனது மகனை அல்லது மகளை பொறியியல் படிக்க வைப்பதற்காக எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டனர் பெற்றோர். பொறியியல் படிப்பு என்பது சிறு வயதில் இருந்தே மாணவர்களின் கனவாக திணிக்கப்பட்டது. மூலை முடுக்கெல்லாம் பொறியியல் கல்லூரிகள். இந்த மோகத்திற்கு காலம் முற்றுப்புள்ளி வைக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளிவரும் 94 சதவிகிதம் பேர் வேலை செய்ய தகுதியற்றவர்களாக வெளி வருகின்றனர்' என்கிறது ஐ.டி சேவை மற்றும் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம்..

கடந்த சில ஆண்டுகளில் பொறியியல் படித்த மாணவர்களில் 6 சதவீதம் பேர்தான் கல்லூரி வளாக நேர்காணயில் பணிக்கு தேர்வாகி உள்ளனர் என்றும், மீதமுள்ளவர்கள் ஏதோ ஒரு வேலை செய்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதாகவும் கூறுகின்றது ஆய்வறிக்கை. பொறியியல் பட்டதாரிகள் பெரும்பான்மையானவர்கள் சராசரியாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியத்திற்கு வேலை செய்து வருதாகவே கூறப்படுகிறது. இந்த முடிவுகளின் எதிரொலியே தற்போது நடந்து வரும் பொறியியல் கலந்தாய்வில் காணப்படும் சரிவு. 

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில், ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தும், 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 5 சுற்றுகள் கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் தற்போதது வரை 3 சுற்று கவுன்சிலிங் முடிவடைந்துள்ளது. இந்த 3 சுற்றுகளில் பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டுள்ள நிலையில் 214 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே கவுன்சிலிங் வாயிலாக சேர்ந்துள்ளனர். 71 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இந்தாண்டு 5 சுற்றுகள் முடிவில் சுமார் 70 ஆயிரம் மாணவர்களே பொறியியல் படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம்தான் இன்றுவரை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் சுயதிறனை வெளிக்கொணரும் வகையிலான பாடங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. நவீன தொழில் நுட்பத்திற்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறதாக குற்றம்சாட்டும் பேராசிரியர்கள், வேலை வாங்கி தருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கல்லூரிகளின் எண்ணம் மாற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். 

காலத்தின் ஓட்டத்தில் பின்தங்கி விட்டால், எந்த துறையாக இருந்தாலும் அது வீழ்வது கட்டாயம் என்பதற்கு பொறியியல் துறை நிகழ்கால எடுத்துக்காட்டு மாறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய கல்லூரிகள் முன் வர வேண்டும் என்றும், அதற்கேற்ப மாணவர்களை உருவாக்கினால் மட்டுமே பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சீர் செய்ய முடியும் என்பதும் கல்வியாளர்களின் வாதம்.