மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை, தங்களின் குறிக்கோளான இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் விரும்புவதாக தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்துள்ளது பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். 17வது மக்களவையின் முதற்கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது, தன்னாட்சி அமைப்புகள் பலவற்றை அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது மத்திய அரசு என்பன போன்ற தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியிடம், இனி வரும் காலங்களில் நாடாளுமன்ற ஜனநாயகம் எப்படியிருக்குமென நாளிதழ் ஒன்றின் சார்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துள்ள யெச்சூரி, "கடந்த ஐந்து ஆண்டுகளில் பல முக்கியமான சட்ட முன் வடிவுகள் தொடர்பாக அவை மாநிலங்களவையில் நிறைவேறாது என்ற காரணத்தினால், மாநிலங்களவையை ஒழித்துக்கட்ட பல தில்லுமுல்லு வழிகளை கையாண்டது. நாடாளுமன்றத்தில் பதில் சொல்வதிலிருந்து தப்புவதற்காக நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களையே சுருக்கியது.
தொடக்கத்திலிருந்தே அரசமைப்பு நிறுவனங்களின் அதிகாரத்தை அரித்து வீழ்த்துவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டது. மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை, தங்களின் குறிக்கோளான இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. இது மிகவும் நெருக்கடியான காலகட்டம்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்களில் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டினை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.