வியாழன், 27 ஜூன், 2019

தண்ணீர் தட்டுப்பாடு சிறிதும் இன்றி, இயங்கி வரும் சென்னை வணிக வளாகம்..! June 27, 2019

தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் வலம் வந்தாலும், மழைநீர் சேகரிப்பால் தன்னுடைய வணிக வளாகத்தை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் ஒரு சினிமா பிரமுகர்.
சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் மக்கள் பரிதவிக்கின்றனர். நிலத்தடி நீரும் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. தண்ணீருக்காக தலைநகர் தவம் கிடக்கிறது. தாகம் தீர்க்க யாகம் நடத்துகிறது ஆளும் கட்சி. எதிர்க்கட்சியோ எங்கே தண்ணீர் என்று சாலையில் இறங்கி சதிராட்டம் ஆடுகிறது. 
ஆனால்  சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்று, தண்ணீர் தட்டுப்பாடு சிறிதும் இன்றி, இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு மழைக் காலத்தின் போது, மழை நீர் சிறிதும் வீணாகாமல், சேமித்ததே இந்த ஆண்டு உதவியதாக குறிப்பிடுகிறார் வணிக வளாக உரிமையாளரும், சினிமா தயாரிப்பாளருமான கசாலி.
கசாலி
ஐந்து மாடிக் கட்டிடமான இதில் சினிமா மற்றும் மார்க்கெட்டிங் போன்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சுமார் 150 ஊழியர்கள் பணிபுரியும் இந்த வணிக வளாகத்தில், அவர்களின் தண்ணீர் பயன்பாட்டில் எந்தப் பிரச்னையும் இந்த ஆண்டு ஏற்படவில்லை என்கின்றனர். 
சென்னையில் இருக்கும் மழைநீர் கால்வாய்களையும், மழைநீர் சேமிப்பு கால்வாய்களாக மாற்றினால், நிலத்தடி நீர் உயர்ந்து, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என அனுபவத்தின் மூலம் கூறுகிறார் கசாலி. 
 
மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், மழைநீரைச் சேமிக்க மக்கள் முன்வர வேண்டும். அரசும் மழைநீர் சேமிப்பு முறையை மீண்டும் கட்டாயப்படுத்தி முறையாக கண்காணித்தால், தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்பதே நிதர்சனம்....

credit ns7.tv