ஞாயிறு, 23 ஜூன், 2019

தண்ணீருக்காக அதிமுக யாகம், திமுக ஆர்ப்பாட்டம்! June 22, 2019

மழை வேண்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வருண யாகம் நடத்திய நிலையில், சீரான குடிநீர் வழங்காத தமிழக அரசை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மழை பெய்ய வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் வருண யாகம் நடத்தப்பட்டது. வேதமந்திரங்கள் ஓதி, மங்கல பொருட்கள், மூலிகை பொருட்களை யாகத்தில் இட்டு சிவாச்சாரியார்கள் வேள்வி செய்தனர்.   
எஸ்.பி.வேலுமணி
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில், அதிமுகவினர், பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். கோயில் வளாகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செடிகளை நட்டுவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வேண்டி இறைவனிடம் கையேந்தி நிற்பதாகக் கூறினார். மழை நீர் சேகரிப்பு திட்டம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார். 
அமைச்சர் ஜெயக்குமார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சைமலை பாலமுருகன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வருண யாக பூஜையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கட்சியினருடன் கலந்து கொண்டார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற வருண யாகத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் யாகம்
இது ஒருபுறம் இருக்க, குடிநீர் பிரச்னையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் திரண்ட திமுகவினர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டு சென்றால் தடுத்து நிறுத்துவோம் என்றும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கும் எனவும் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இதேபோல் சென்னை, பொன்னேரி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 இதற்கிடையே, தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி விடுமுறை அளிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தனியார் பள்ளிகள், தண்ணீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்ததாகவும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகி உறுதி செய்த பின்னரே, பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனை பாதிக்கும் வகையில் விதிகளுக்கு முரணாக தனியார் பள்ளிகள் செயல்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு இருந்தால், மாற்று ஏற்பாடுகளை செய்து பள்ளிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்தந்த பள்ளி நிர்வாகத்தின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.