வருமான வரித்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் 15 பேருக்கு இன்று கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு அதிரடி காட்டியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆணையர் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ளவர்கள் ஆவர்.
வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்த ஊழல் மற்றும் தீவிரமான குற்றச்சாட்டு உடைய 15 உயர் அதிகாரிகளுக்கு இன்று கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று வருமானவரித்துறையில் பணிபுரிந்து வந்த 12 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்தது, அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்துள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் 27 அதிகாரிகள் இந்த முறையில் பணி நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதன்மை ஆணையர் அனுப் ஸ்ரீவத்சவா முக்கியமானவர் ஆவார். இவர் மீது சிபிஐ வழக்குகள் இரண்டு, கிரிமினல் கூட்டு சதி, லஞ்சம் பெற்றது ஆகிய வழக்குகளும், பாலியல், பணம் பறித்தல், அரசு குடியிருப்பை காலி செய்யாதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதே போல வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, மோசடி பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குகள் பாய்ந்துள்ள ஆணையர் அதுல் தீக்ஷித்தும் முக்கியமானவராக விளங்குகிறார்.
இவர்களை போன்று ஒவ்வொருவரின் வழக்கு, குற்றச்சாட்டு விவரங்களை தொகுதுத்து விவரத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு 3 மாத சம்பளம் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சன்சார் சந்த், ஸ்ரீ ஹர்ஷா, வினய் பிரிஜ் சிங், அசோக் மகிதா, வீரேந்திர அகர்வால், அம்ரேஷ் ஜெயின், நலின்குமார், பபனா, பிக்ஸ்த், வினோத் குமார் சங்கா, ராஜூசேகர், அசோக் குமார் அஸ்வால் மற்றும் முகமது அல்தாப் ஆகியோர் மற்ற 13 அதிகாரிகள் ஆவார்கள்.
உலகளாவிய நாடுகளின் ஊழல் பட்டியலில் 81வது நிலையில் இருந்த இந்தியா கடந்த ஆண்டு 3 இடங்கள் முன்னேறி 78வது இடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.