ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் விரால் ஆச்சர்யா தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது நிதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக எனது பணியிலிருந்து விலகுகிறேன் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வது இயல்பானது தானே என்ற கேள்வி எழலாம். ஆனால் விரால் ஆச்சார்யாவின் ராஜினாமா இயல்பானதோ அல்லது திடீரென நடந்ததோ அல்ல. கடந்த ஆண்டிலிருந்து நடந்த நிகழ்வுகளின் நீட்சியாகவே விரால் ஆச்சர்யாவின் பதவி விலகலை பார்க்க வேண்டியதிருக்கிறது.
2018 அக்டோபரில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விடும் என விரால் ஆச்சர்யா விடுத்த எச்சரிக்கை சர்ச்சைக்குள்ளானது. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு கேட்ட போது, அவசர கால நிதியை அரசுக் கருவூலத்திற்கு மாற்றினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என ரிசர்வ் வங்கி மறுத்தது. இதனால் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கும் மத்திய அரசுக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தது.
அந்த விவகாரத்தில் உர்ஜித் படேலுக்கும் ஆதரவாகவே விரால் ஆச்சர்யா அவ்வாறு பேசினார் என்ற தகவல்கள் வெளியாகின. வங்கி மூலதன விகிதம், வாராக்கடன் போன்ற விவகாரங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமான மோதல்கள் தொடரவே பதவிக்காலம் முடிய ஒராண்டு மிச்சமிருக்கும் போதே உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதே விரால் ஆச்சர்யாவும் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்குள் விரால் ஆச்சர்யாவும் ராஜினாமா செய்திருக்கிறார். ரிசர்வ் வங்கியின் உச்ச பதவியில் இருக்கும் இருவர் ஆறு மாத இடைவெளியில் ராஜினாமா செய்தது இந்திய வரலாற்றில் இது தான் முதன்முறை. ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகளில் பதவி வகிப்பவர்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதும் உடனே ராஜினாமா செய்வதும் இந்திய பொருளாதாரத்திற்கு, இன்னும் சொல்லப் போனால் இந்திய ஜனநாயகத்திற்கே நல்ல சமிக்ஞைகளை தராது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
credit ns7.tv