வியாழன், 20 ஜூன், 2019

நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை! June 20, 2019

Image
விவசாயிகளின் வருவாயை, வரும் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்காக அரசு மேற்கொள்ள உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விளக்கமாகப் பேசினார். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும்  இலக்கை எட்டும் நோக்கில் விவசாயத்துறையில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நீலப்புரட்சியின் பயனாக மீன் உற்பத்தியில் இந்தியா தற்போது 2வது இடத்தில் உள்ளதாகக் கூறிய ராம்நாத் கோவிந்த், விரைவில் முதலிடத்தைப் பெறும் சக்தி நாட்டிற்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு தமது அரசு முதல் நாளிலிருந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடைசி மனிதனின் துயரங்களை போக்கும் வகையில் அரசு முழு வீச்சில் செயல்படும் என கூறினார். கிராமப்புறங்களில் புதிதாக 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று தெரிவித்த அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வது அரசின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று என்று தெரிவித்த ராம்நாத் கோவிந்த், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டள்ளதாகக் குறிப்பிட்டார். முத்தலாக், நிகாஹ் ஹலாலா போன்ற நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ராம்நாத் கோவிந்த், கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் உஜ்வாலா யோஜானா, மிஷன் ரெயின்போ, குட்லக் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.