வியாழன், 27 ஜூன், 2019

கடவுளின் நாமத்தால் நிகழ்த்தப்படும் வன்முறைகள்! June 27, 2019


Image
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதும் சரி, சமீபத்தில் நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும் சரி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளால் பாஜக ஆட்சி பொறுப்பிற்கு ஏன் வரக்கூடாது என்பதற்காக முன்வைக்கப்பட்ட வாதத்தில் முதன்மையானது, பாஜகவின் ஆட்சியில் மத ரீதியிலான செயற்பாடுகளும் - வன்முறைகளும் அதிகரிக்கும் என்பதுதான். 
அதன் காரணத்தினாலேயே பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்துவிடக்கூடாதென்ற வாதத்தினை தேர்தல் பிரச்சார சமயங்களில் வலுவாக முன்வைத்தன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள். இதோ, மேற்கண்ட கூற்றினை மெய்ப்பித்திடும் வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நாடு முழுவதும் சில சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. 
கடந்த மே 25 ஆம் தேதி டெல்லி குர்கான் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றுக்கு சென்று தொழுகை நடத்திவிட்டு வந்த பரக்கத் அலியை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச்சொல்லி வன்முறையில் ஈடுபட்டுள்ளது ஓர் கும்பல். தாக்குதலில் ஈடுபட்டவர்களிடமிருந்து தப்பிவந்துள்ளர் பரக்கத் அலி.
அதேபோல் மேற்குவங்கத்தில் ஹபீஸ் என்ற இளைஞர் தலையில் குல்லாவுடன் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த போது ,ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டுகொண்டுவந்த சிலர், அவரையும் முழக்கமிடச் சொல்லி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருக்கின்றனர்.
மூன்றாவதாக  கடந்த 18 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் அன்சாரி என்ற இளைஞரை திருடன் என பிடித்து சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தாக்கியுள்ளது சில பேரைக்கொண்ட கும்பல். அப்போது ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என முழக்கமிடச்சொல்லி அன்சாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார்.
மேற்கண்ட மூன்று சம்பவங்கள் ஏதோ எளிதாக கடந்துசெல்ல கூடியதல்ல. கடவுளின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவதும், கடவுளின் நாமத்தை சொல்ல சொல்லி மனித உயிர்களை கொன்றொழிப்பதும் எந்த வகையில் ஏற்புடையது என்பதுதான் நாடு முழுவதும் இந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் பொதுமக்களின் மனோநிலை.
அதே போல், மேற்கண்ட சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஒருவரை அடித்து அல்ல அன்பால் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லுங்கள். வன்முறையால் ஜெய் ஸ்ரீராம் சொல்லக் சொல்பவர்கள் அரசின் நற்பெயரை குலைக்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இப்படியான சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்ற எவ்வித எச்சரிக்கையும் இல்லை. 
மதச்சார்பின்மை எனும் தேசத்தின் தவிர்க்க இயலாத விழுமியங்களில் ஒன்றினை காத்திட வேண்டுமென்றால் மதத்தின் பெயரால், கடவுள்களின் பெயரால் இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடைபெறாத வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. மேற்கொள்ளுமா அரசு?
credit ns 7.tv