புதன், 26 ஜூன், 2019

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு! June 26, 2019

Authors
Image
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, அதனை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், தற்போதுள்ள 2 ஆயிரம் அபராதம் என்ற விதிமுறையை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதேபோல், அவசர வாகனங்கள் எனப்படும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கவும், வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் புதிய சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதேபோல் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை அதிகபட்சம் ஒரு லட்சம் வரை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 5,000 ஆயிரம் ஆக உயர்த்தவும், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதத்தை 5,000 ரூபாயாக ஆக உயர்த்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதேபோல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்கினால் 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதம் வரை தற்காலிக ரத்து செய்யப்படும். சாலைகளில் அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராதம் 5,000 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. 
முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்ட திருத்தம், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், மோடி தலைமையில் மீண்டும் பதவியேற்றுள்ள பாஜக அரசு, முந்தைய மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.