நாடு முழுவதும் இந்த மாதம் 42 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில், வட மாநிலங்களில் மழை பொழியும். எனினும், இந்த வருடம் தலைநகர் டெல்லியில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால், டெல்லியில் 100 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஹரியானாவில் 84 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தில் 74 சதவீதமும், ராஜஸ்தானில் 77 சதவீதமும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் மட்டுமின்றி, தென் மாநிலங்களிலும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது இடத்தைப் பொருத்து 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு மழை இல்லாததால், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த திங்கள் கிழமை 48 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.