மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தயாநிதிமாறன், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்தார். தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுவதாகத் தெரிவித்த தயாநிதிமாறன், இதற்கு தீர்வு காண அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீர்மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சரியாக கையாளாததே வறட்சிக்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக அரசை தயாநிதி மாறன் கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், தயாநிதிமாறன் தொடர்பில்லாமல் பேசி வருவதாக பாஜக எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார். இதையடுத்து, அதிமுக அரசு மீது தயாநிதி மாறன் முன்வைத்த சில விமர்சன வார்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றி காரணமாக மத்திய அரசு மமதையுடன் நடந்து கொள்வதாக தயாநிதி மாறன் விமர்சித்தார். எதிர்க்கட்சிகளின் பலவீனம் காரணமாகவே வடமாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதாகத் தெரிவித்த தயாநிதி மாறன், மக்களவை தேர்தல் குளறுபடிகள் குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு எதிரான பல்வேறு திட்டங்களை பாஜக அரசு திணித்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்ந்தே பிரதமர் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
credit ns7.tv