வெள்ளி, 28 ஜூன், 2019

காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிப்பதற்கு 1% வாய்ப்பு கூட இல்லை!” - வீரப்ப மொய்லி June 28, 2019

Image
2019 நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி பதிவு செய்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாதது தேசிய அரசியலில் அதிர்வலைகளையும், காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தையும் பறைசாற்றியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னதாக நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலக கூடாது என்று அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தனது ராஜினாமா முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவே தெரியவந்துள்ளது. 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மொய்லி இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “என்ன நடக்கும் என்பதற்கு உறுதி கூற முடியாது, எனக்கு தெரிந்த வகையில் காங்கிரஸ் தலைமையை ஏற்க ராகுல் காந்திக்கு 1% கூட வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. 
காங்கிரஸ் காரியக் கமிட்டி மீண்டும் கூடும்போது, ராகுலின் ராஜினாமா குறித்து விவாதிக்கப்படும், அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றால் வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்படும் என்றார்.
முன்னதாக மூத்த தலைவர் சசி தரூர், இந்த விவகாரம் குறித்து கூறுகையில் தேர்தல் தோல்வியை அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக தன்னுடைய தோல்வியாகவே கருதி அதற்குதகுந்தாற் போல செயல்படுகிறார் என்றார்.
இதனிடையே நேற்று ஹரியானா தலைவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் விலகிவிட்டதாகவும், மற்ற தலைவர்களை என்னால் விலக கூற முடியாது என்றும் அது அவரவர் விருப்பம் என்றும் கூறினார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகுவது ஏறக்குறைய உறுதியாகியிப்பதாகவே தெரிகிறது.