ஞாயிறு, 30 ஜூன், 2019

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவோருக்கான உணவு பட்ஜெட்டில் இனி பாகுபாடில்லை! June 30, 2019

credit ns7.tv
Image
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெறுவோருக்கான உணவு பட்ஜெட்டில் இனி பாகுபாடு காட்டப்படாது என்று மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு அறிவித்துள்ளார்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான Sports Authority of India-வில் (SAI) பயிற்சி பெறும் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர், வீராங்கனைகளுக்கான உணவு பட்ஜெட் தற்போது முறையே ரூ.250, ரூ.480 மற்றும் ரூ.690 ஆக உள்ளது. இந்த தொகையினை பாகுபாடின்றி சமமாக இனி வழங்கப்போவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான கிரன் ரிஜுஜு கூறியுள்ளார்.
இது தொடர்பாக கிரன் ரிஜுஜு கூறுகையில், அண்மையில் பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள தேசிய விளையாட்டு மையத்திற்கு சென்றிருந்த போது அங்கு நான் உணவு உட்கொண்டேன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயிற்சி பெறும் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர், வீராங்கனைகள் என இரு தரப்பினரும் வேறு வேறு வகையான உணவுகளை உட்கொள்வதையும் கண்டேன், அவர்களின் உணவு பட்ஜெட்டில் பாரபட்சம் இருப்பதே இதற்கு காரணமாக இருந்தது.
ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்கு அடிப்படையே உணவு தான் எனும் போது எந்த ஒரு வீரராலும் போதுமான உணவில்லாமல் உலக சாம்பியனாக வர இயலாது. ஒரு வீரரின் திறனை பொறுத்து அவருக்கான உணவு கொடுக்கப்படக் கூடாது என்பதால் வீரரின் உணவை பட்ஜெட் தீர்மானிக்கக்கூடாது.
எனவே நாடு முழுவதும் SAI மையங்களில் பயிற்சி பெறும் வீரர்களின் உணவு பட்ஜெட்டில் இனி முரண்பாடோ, பாகுபாடோ இருக்கக்கூடாது என்று விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என குறிப்பிட்ட கிரன் ரிஜுஜு இந்த மையத்தில் உள்ள சமையலைறைகள் நவீன வசதிகள் கொண்டதாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கிரன் ரிஜுஜுவின் இந்த அறிவிப்பின் மூலம் SAI மையங்களில் பயிற்சி பெறும் 12,500 வீரர்கள், வீராங்கனைகள் பலனடைவர். இதற்காக கூடுதலாக 150 கோடி ரூபாயையும் அமைச்சர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.