கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று நிச்சயம் நம்பலாம் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக தொகுதிகளில் வென்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இருப்பினும் 37 தொகுதிகளை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், 80 தொகுதிகளில் வென்ற காங்கிரஸும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை பிடித்தது. தேவகவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி முதல்வராக உள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சியமைத்த நாள் முதல் தற்போது வரையிலும் கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இருகட்சியின் தலைவர்களுக்குள்ளும், தொண்டர்களுக்குள்ளும் உரசல்கள் நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இக்கூட்டணியின் பலத்தை வெட்ட வெளிச்சமாக்கியது.
இதுவரை இல்லாத அளவிற்கு மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றியது, மஜத ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாஜக ஆதரவுடன் சுயேட்சை ஒரு தொகுதியிலும் வென்றிருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை தொடர்ந்து இவ்விரு கட்சிகளுக்கிடையிலான உரசல் உச்சத்தை தொட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் வெளிப்படையாகவே பாஜகவை ஆதரித்து பேசினார். தோல்விக்கு காரணம் காங்கிரஸ் தான் என மஜதவினரும், மஜதவினர் என காங்கிரஸாரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் மஜத நிறுவனரும், முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை வன்மையாக கண்டித்தார்.
“இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கூட்டணி தாக்குப்பிடிக்கும் என்று கூற இயலாது. இதனை பார்க்கும்போது விரைவில் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று நிச்சயம் நம்பலாம்.
கூட்டணியை காப்பாற்ற குமாரசாமி தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சிக்காக ஒரு அமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுத்தோம்.
அவர்கள் (காங்கிரஸ்) எங்களுக்கு 5 ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறினார்கள் ஆனால் இப்போது அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று பாருங்கள்.” என தேவகவுடா பேசினார்.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி சிக்கலில் இருப்பதாக தேவகவுடாவே ஒப்புக்கொண்டுள்ளது அரசியல் சூழலை பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த எம்.எல்.ஏ பாட்டீலுடன் சேர்ந்து சமீபத்தில் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதில் மஜத உடனான கூட்டணியால் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பதால் இந்த கூட்டணியை முறித்துக்கொள்வதே சிறந்தது என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் கூட்டணி கட்சிகளிடையே நிலைமை மோசமாகி வருவதால் கர்நாகாவில் விரைவில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.