சனி, 22 ஜூன், 2019

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் அத்தியாவசியமான உயிரினம்! June 22, 2019

Image
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் அத்தியாவசியமான உயிரினம் என அறியப்படும் யுனிகார்ன் வெட்டுக்கிளி குறித்து விவரிக்கிறது ’உலகைக் கலக்கும் யுனிகார்ன் வெட்டிக்கிளி; என்ற இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு.
அமேசான் காடுகளைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதைவிட விட பழமையானதும், மர்மம் நிறைந்ததுமான பிரேசிலின் அட்லாண்டிக் மழைக் காடுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும், அட்லாண்டிக் காடுகளின் முக்கால்வாசிப் பகுதிகள், மனித நடமாட்டமே இல்லாத மர்மப் பிரதேசங்களாகத் தான் இருந்தன. மனித நடமாட்டமே இல்லாமல் இருந்ததனால் தானோ என்னவோ, இதுவரை கேள்வியே பட்டிருக்காத எக்கச்சக்கமான பூச்சியினங்கள் இன்றும் கூட இந்தக் காடுகளில் உயிர்வாழ்ந்து வருகின்றன. இந்தப் பூச்சி இனங்களுள், பார்ப்பவர்களின் கண்களைக் கொள்ளைக் கொள்ளச் செய்யும் பல்வேறு வகைப்பட்ட வெட்டுக்கிளிகளும் அடக்கம். அட்லாண்டிக் மழைக்காட்டில் கண்டறியப்பட்டு உள்ள வெட்டுக்கிளிக் கூட்டங்களில், பாதியை மட்டும் தான், இதுவரை சூழலியல் அறிஞர்களால் இனம் கண்டுகொள்ள முடிந்துள்ளது.
இந்த வெட்டுக் கிளிகளுக்குப் பின்னுள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக, லினோர்டா லான்னா என்பவர் தலைமையிலான ஆராய்சியாளர்கள் குழுவொன்று, பிரேசில் மழைக் காடுகளுக்குப் பலமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடர் முயற்சிகளின் பலனாக, 2017 ஆம் ஆண்டின் கிறுஸ்துமஸுக்கு முந்தையை நாள் இரவில், யுனிகார்ன் என்ற ஒரு புது வெட்டுக்கிளி இனம் கண்டறியப்பட்டது. கையளவு அடக்கத்துடன் இருக்கும் இந்த வெட்டுக்கிளியின் சிவப்பேறிய உடலையும், கொம்பு போன்ற கூரான முகத்தையும் பார்த்த ஆராய்ச்சியாளர்கள் அதிசயத்துப் போனார்கள். பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவை சுற்றியுள்ள பல பகுதிகளில், இந்த யுனிகார்ன் வெட்டுக் கிளிகள் நிறைந்து காணப்படுகின்றன.  இந்த புதிரான வெட்டுக்கிளியின் சிறப்பு என்னவென்றால், பச்சோந்தியைப் போல இருக்குமிடத்திற்குத் தகுந்தது போலத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியும் என்பது தான்.
ஆண் யுனிகார்ன் வெட்டுக்கிளியின் நகமானது, இரைகளை வேட்டையாடுவதற்கு ஏதுவான முறையில் பிரத்யேகமாக அமைந்துள்ளது. இந்தக் கூரான நகங்களைக் கொண்டு, இரையைப் பிடித்த மறுகணம் ஆண் வெட்டுக்கிளியால் அதன் கண்களை சிதைத்துவிட முடியும். பெண் யுனிகார்ன் வெட்டுக்கிளியின் பிங்க் நிறத்திலான மார்புக்கூடு, ஆண் வெட்டுக்கிளியிலிருந்து அதனை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. நாம் வாழும் உலகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வெட்டுக் கிளிகளின் இருப்பானது மிகவும் அவசியம் என்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். இந்த உலகத்தின் உணவுச் சங்கலியை முறையாக நிர்வகிப்பதிலும் வெட்டுக் கிளிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த உலகத்தில் வெட்டுக்கிளிகளைப்  பிடிக்காதக் குழந்தைகள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட வசீகரமும் துறுதுறுப்பும் நிறைந்த கண்களைக் கொண்ட வெட்டுக் கிளி இனத்தைப் பாதுகாப்பது, நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யக்கூடிய கடமையாகும்.