ஆல மரத்தை காலம் கடந்த பின்னர் விழுதுகள் தாங்கும் என்பதைப் போன்று, தன்னை உருவாக்கிய அரசுப் பள்ளியை அதில் படித்த மாணவர்கள் இரண்டு பேர் நவீனமாக மாற்றியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகழ்வாராய்ச்சிக்கு பெயர் பெற்ற கீழடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் நடைபெறும் இந்தப் பள்ளி கடந்த 1953 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியை என 6 பேர் பணிபுரிய, 150 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
கீழடி, பசியாபுரம், காமராஜர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இந்தப் பள்ளி உரிய பராமரிப்பு இல்லாததால் பாழடைந்தது. கூடவே தனியார் பள்ளியின் மோகத்தால் இந்த அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 150 ஆகக் குறைந்தது. இந்தப் பள்ளிதான் தற்போது புதிய பொலிவடைந்துள்ளது. எப்படி நடந்தது இந்த மாற்றம்?
டாக்டர் பன்னீர்செல்வம், வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். வருடந்தோறும் இந்தப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வந்தனர். அப்போது தங்களை உருவாக்கிய பள்ளி சிதிலமடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்து வேதனையில் உழன்றனர். தலைமை ஆசிரியை ஜீவாவின் முயற்சியால், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு 5 ஆண்டுகளுக்கு இந்தப் பள்ளியை சகோதரர்கள் இருவரும் தத்தெடுத்துக் கொண்டனர்.
தங்களது சொந்த பணத்தில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்த சகோதரர்கள் இருவரும் கடந்த கோடை விடுமுறையில் பள்ளியை சீரமைத்துள்ளனர். காற்றோட்டமான ஜன்னல்கள், பச்சை நிறத்தில் எழுதும் பலகை, மேஜை, நாற்காலி, மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் எனப் பள்ளியை நவீனமாகத் தரம் உயர்த்தி உள்ளனர்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழடி அரசு தொடக்கப்பள்ளிக்கு வரும் டாக்டர் பன்னீர்செல்வம், வெங்கடசுப்பிரமணியன் இருவரும் பள்ளிக்கு வேறு என்னென்ன தேவை என்பதையும் கேட்டு நிறைவேற்றி வருகின்றனர். சகோதரர்களில் ஒருவரான வெங்கடசுப்பிரமணியன் கீழடியின் முன்னாள் ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
பாழடைந்து கிடந்த அரசு பள்ளி முன்னாள் மாணவர்களால் புதுப் பொலிவு பெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுமையடைந்த தாயை பராமரிப்பதுபோல் பாழடைந்த நிலையில் இருந்த அரசுப் பள்ளியை முன்னாள் மாணவர்கள் சீரமைத்த சம்பவம் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.