Authors
தங்கள் நாட்டில் உள்ள வங்கிகளில் கருப்பு பணம் குவித்து வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஸ்விஸ்சர்லாந்து அரசு அதிகாரிகள் வழங்க உள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ல் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது, ஸ்விஸ் வங்கிகளில் கருப்பு பணம் குவித்து வைத்துள்ளவர்கள் மீது அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறியிருந்தது.
இருநாடுகளுக்களுக்கிடைலான உறவுகள் இந்த காலகட்டத்தில் பலப்படுத்தப்பட்டது. கருப்பு பணம் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வது, பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்டவைகளில் இருநாடுகளுக்கிடையே புரிந்துணர்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது அந்நாட்டு அதிகாரிகள் முறைகேடாக இந்தியர்கள் குவித்துள்ள பண விவகாரங்கள் குறித்து இந்திய அரசாங்கத்திடம் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்திய அரசிடம் ஸ்விஸ் அரசு வழங்கவுள்ள பட்டியலில் போலி நிறுவனங்கள் பெயரில் பணம் குவித்து வைத்திருப்பவர்கள், ரியல் எஸ்டேட், நிதி, தொழில்நுட்பம், தொலைதொடர்பு, பொறியியல் நிறுவனங்கள், வைர வியாபாரிகள் போன்றவர்களின் பெயர்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கருப்பு பண விவகாரம் இந்தியாவில் அரசியல் ரீதியிலான விவகாரமாக மாறிய நிலையில், கருப்பு பணத்தை குவித்து வைப்பதில் பாதுகாப்பான பகுதியாக விளங்கும் ஸ்விட்சர்லாந்து இந்த ரகசிய தகவல்களை வழங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்கள் இந்தியாவிற்கு கிடைக்கும்பட்சத்தில் கருப்பு பணம் மீதான நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.