செவ்வாய், 25 ஜூன், 2019

அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி சரமாரி குற்றச்சாட்டு! June 24, 2019

Authors
Image
உத்தரப்பிரதேசத்தில் மகாகூட்டணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் அகிலேஷ் யாதவ், மாயாவதி கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அகிலேஷ் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வந்த மாயாவதி தற்போது அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அகிலேஷ் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட பேச முன்வரவில்லை, அகிலேஷ் முதல்வராக இருந்த போது யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பகுஜன்சமாஜ் பொதுச்செயலாளர் சதீஷ் மிஸ்ரா அகிலேஷிடம் பேசியபோது என்னிடம் பேசுமாறு கூறியுள்ளார். இருப்பினும் சீனியர் என்ற அடிப்படையில் நானே அவருக்கு தொடர்பு கொண்டு அவரின் குடும்ப உறுப்பினர்களின் தோல்விக்கு எனது வருத்தத்தை வெளிப்படுத்தினேன்.
நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு போட்டியிட நான் வாய்ப்பு கொடுத்த போதும், சதீஷ் மிஸ்ரா வாயிலாக இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தரவேண்டாம் அப்படித் தந்தால் வாக்குகள் பிரிந்துவிடும் என்று கூறியிருக்கிறார், எனினும் அவரின் கோரிக்கையை நான் ஏற்க மறுத்தேன் என்று மாயாவதி குறிப்பிட்டார்.
மேலும் பேசிய மாயாவதி, “தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்காததற்கு காரணமே அவர் ஆட்சியில் இருந்த போது சிறுபான்மையினருக்கும், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக செயல்பட்டதே ஆகும்” என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயாவதி, இந்த கூட்டணி உதவாத ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இனிவரும் தேர்தல்கள் சிறிதாகினும், பெரிதாகினும் கட்சியின் நலன் கருதி இனி பகுஜன்சமாஜ் தனித்தே போட்டியிடும் என்று மாயாவதி உறுதிபட தெரிவித்தார்.
முந்தைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் தாஜ்மகால் காரிடார் விவகாரத்தில் என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க முலாயம்சிங் முனைந்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

thanks ns7.tv