வெள்ளி, 28 ஜூன், 2019

காஷ்மீரில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் நேருதான்: அமித்ஷா June 28, 2019


Image
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத செயல்களுக்கு ஜவஹர்லால் நேருதான் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த பின்னர் பேசிய அவர், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீரில் தற்போது தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். 
குடியரசு தலைவர் ஆட்சி என்பதை ஒரு போதும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியது இல்லை என்றும், இதுவரை 93 முறை அதனை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி ஜனநாயகம் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். 
ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை என பெருமிதம் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் தான் மத்திய அரசை கண்டு பயப்படுவதாகவும் மக்கள் யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்தார். 
மேலும், காஷ்மீரில் தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் நேருதான் எனவும் அவர்தான் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டார் எனவும் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதுமட்டுமல்லாமல், மதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்தது வரலாற்றுப்பிழை எனவும் பட்டேலின் பேச்சை அலட்சியம் செய்து காஷ்மீர் பிரச்சனையை உருவாக்கிவிட்டார். என தெரிவித்தார்.
 
நேரு செய்த பிழைகளால் நாடு பிரச்சனைகளை சந்திக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரிவினையின்போது கொல்லப்பட்டார்கள்; தீவிரவாதம் நாடுமுழுவதும் பரவி விட்டது எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

credit ns7.tv