செவ்வாய், 25 ஜூன், 2019

தண்ணீர் சேமிப்பில் சூடுபட்ட பூனை போல மாறியிருக்கும் தமிழகம்...! June 25, 2019

தண்ணீர் சேமிப்பில் சூடுபட்ட பூனை போல மாறியிருக்கிறது தமிழ்நாடு. கடும் வறட்சியை எதிர்கொண்ட பின்னர், மழைநீர் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் தமிழக மக்கள். 
மழை நீர்... உயிர் நீர்... மழை நீரைச் சேகரிப்போம், நிலத்தடி நீரைக் காப்போம் என முழக்கங்கள் எழுப்பினாலும், செலவு மற்றும் இடவசதியைக் காரணம் காட்டி, அதனைச் செயல்படுத்துவதில் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் குறைந்த செலவில் எளிமையான அதே நேரம் மிகுந்த பலனளிக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மூலம் தண்ணீர் பிரச்னையை 6 ஆண்டுகளாக திறம்பட சமாளித்து வருகிறார் விஜயன். 
விஜயன்
சுற்றியுள்ள வீடுகள் தண்ணீருக்காக தவம் கிடக்கும் நிலையில், மேற்குமாம்பலம் அஞ்சுவிளக்கு பகுதியில் உள்ள விஜயன் வீட்டில் மட்டும் 24 மணிநேரமும் தண்ணீர் கிடைக்கிறது. 10 அடி நீளம் கொண்ட 3 பி.வி.சி பைப்புகள், ஒரு கை திருகு கருவி இவை மட்டுமே இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்புக்கு போதுமானது என்கிறார் விஜயன். எளிய முறையில் மழை நீரை சேகரித்து விடலாம். இதற்கு இடப்பிரச்னை என்பதும் இல்லை. உரிய இடத்தில் துளையிட்டு பைப்புகளை ஆழமாக இறக்கி விடலாம். இந்த பைப்புகளுக்கு மழைநீர் சென்றடையும் வண்ணம் செய்து விட்டால் போதுமானது.  
ஆண்டு தோறும் ஆழ்துளையில் சேரும் சேறு மற்றும் கழிவுகளை கை திருகு கருவி மூலம் அப்புறப்படுத்தி விட்டால் மழை நீர் மொத்தமாக சேகரிக்கப்பட்டு விடுகிறது. பயனுள்ள இந்த அமைப்பை உருவாக்குவது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் விஜயன். 
credit :ns7.tv