உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஆஸ்திரேலியவைச் சேர்ந்த நிறுவனம். இந்தப்பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது? அதற்கான காரணங்கள் என்ன?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் உலகிலேயே அமைதியான நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 163 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அந்தந்த நாடுகளின் ராணுவ செயல்பாடுகள் , மக்களின் பாதுகாப்பு, உள்நாடு மற்றும் அந்தநாடு தொடர்புகொண்டுள்ள சர்வதேச பிரச்சனைகள் உள்ளிட்ட அளவீடுகளைக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து உலகிலேயே அமைதி நிலவும் நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக ஐஸ்லாந்துதான் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்த பட்டியலில் இந்தியா 141வது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 136வது இடத்தில் இருந்த இந்தியா 5 இடங்கள் பின் தங்கி 141வது இடத்திற்கு சென்றுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு மோதல்களால் ஏற்படும் இறப்புகள் குறைந்திருக்கும் அதேவேளையில் கடந்த ஆண்டைவிட 6 மடங்கு அமைதி குறைந்த நாடுகளின் பட்டியிலும் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக, காலநிலை அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளில் ஆசியாவில் 7வது நாடாகவும் இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா,சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தான் ராணுவத்திற்காக அதிகமாக செலவிடும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் உலகம் முழுவதுமான அமைதி அதிகரித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் தெற்காசியாவில் உள்ள நாடுகள் உலக சராசரியை விட அமைதி குறைந்த நாடுகளாக மாறிவருவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது இந்த ஆய்வு.
163 நாடுகள் கொண்ட இந்தப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் 163வது இடம் அதாவது கடைசி இடத்தைப் பிடித்து உலகிலேயே அமைதி குறைந்த நாடு என்ற பெயரை வாங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்த சிரியா ஒரு படி முன்னேறி கடைசிக்கு முந்தைய இடத்திற்கு வந்துள்ளது. தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன