புதன், 19 ஜூன், 2019

ஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்...! June 19, 2019


Image
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். எனினும், இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அங்கம் வகிக்கிற அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணனும், திமுக சார்பில் டி.ஆர்.பாலுவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவிப்பர் என கருதப்படுகிறது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தில் தான் பங்கேற்க போவது இல்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், முக்கியமான விவகாரம் தொடர்பாக அரசியலமைப்பு மற்றும் தேர்தல் நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதால் கூட்டத்தில் பங்கேற்க போதிய நேரமில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரம் தொடர்பாக குறுகிய நேரத்தில் விவாதித்து முடிவெடுக்க இயலாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.