பொய்செய்திகள் பரவுவதற்கு பெரும்பான்மையான காரணமாக இருப்பது சோசியல் மீடியாக்களே. குறிப்பாக வாட்சப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவைகள்தான் பொய் செய்திகள் பரவுவதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றன. உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும், உண்மையான இந்தியனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற பின்குறிப்புகளோடு பரப்பப்படும் செய்திகள், வீடியோக்கள் அதன் உண்மைத் தன்மை ஆராயப்படாமல் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் ஷேர் செய்யப்படுகிறது.
உண்மைதன்மையை ஆராயாமல் பொய்யான செய்திகளை பரப்புவதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. கடந்த இருநாட்களுக்கு முன், உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண், அது குறித்து புகாரளிக்கச் சென்ற போது, அந்த காவல் நிலைய அதிகாரி எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டுமென்றால் தன்னோடு உறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று அந்த பெண்ணை வற்புறுத்தினார் என்ற செய்தி வேகமாக பரவியது. அந்த செய்தி உண்மையல்ல என்று பலர் விளக்கமளித்திருந்த போதும், பாடகி சின்மயி அதை ஷேர் செய்திருந்தார்.
சின்மயியின் ட்விட்டை சுட்டிக்காட்டி, பிரபலங்களும் இது போன்ற பொய்செய்திகளை பரப்புகிறார்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறை வருத்தத்தை தெரிவித்திருந்தது. மேலும் அந்த சம்பவம் நடைபெற்றது 2017ல் என்றும் அது ஏன் 2019ல் பரப்பப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
பொய்செய்தியை ஷேர்செய்ததற்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி உடனடியாக அந்த ட்விட்டை டெலிட் செய்தார்.
இந்நிலையில், மழை மேகங்களை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நாசா உருவாக்கியுள்ளது. உலகம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள் என்று ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது.
அந்த வீடியோ உண்மையல்ல என்றும், அந்த வீடியோவில் இருப்பது, ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் அதிக திறன் கொண்ட RS-25 இஞ்சினை நாசா பிப்ரவரி 21 2018ல் ஸ்டென்னிஸ் வான்வெளி நிலைய ஆராய்ச்சி மையத்தில் வைத்து சோதித்து பார்த்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று விளக்கமளிக்கப்பட்டது. அதோடு அந்த எஞ்சினில் பயன்படுத்தப்பட்டது திரவ ஹைட்ரஜன் மற்றும் திரவ ஆக்ஸிஜன் என்றும் அது இரண்டும் சேரும்போது H20 கிடைக்கும். அந்த வீடியோவில் பார்த்தது எளிய வேதிவினைகள் மூலம் நடைபெறும் ஒரு விளைவுதான் என்று கடந்த 2018ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை விளக்கமளித்திருந்தது.
அந்த வீடியோ தற்போது மீண்டும் ட்விட்டரில் வைரலாக ஆரம்பித்திருக்கிறது. அந்த வீடியோவை ஷேர் செய்திருப்பது பாலிவுட் சினிமா உலகின் பெரும் நட்சத்திரமான அமிதாப் பச்சன் தான். இதுபோன்ற ஒன்று இந்தியாவுக்கு கிடைக்குமா? அதாவது இப்போதே, இப்போதே.. ப்ளீஸ் என்று கருத்து தெரிவித்து ஷேர் செய்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் மட்டுமல்லாமல், இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏர் மார்ஷெல் அனில் சோப்ராவும் அந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
சமீப காலமாக குறைவாக பெய்யும் மழையால் இந்தியா தண்ணீர் பிரச்சனையை சந்திக்கிறது. தண்ணீர் பிரச்சனை தீர ஏதாவது செய்தாக வேண்டும் என்ற இவர்களது எண்ணம் புரிந்துக்கொள்ளக்கூடியது என்றாலும் பொய் செய்திகளை பரப்புவது முறையல்ல.
சாதாரண ஆட்கள் பொய்செய்தியை பரப்பும் போது ஏற்படும் தாக்கத்தை விட, பிரபலங்கள் பகிரும் செய்திகள் அதிகம் பேரை சென்றடையும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அமிதாப் பச்சன் பகிர்ந்திருக்கும் வீடியோவை 5000+ நபர்கள் ரிட்வீட்டும், 28000+ பேர் லைக்கும் செய்திருக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்களை விட, அதன் உண்மைத் தன்மை தெரியாமல் அதை பலர் நம்புவதற்கே வாய்ப்புகள் அதிகம். பொய்செய்திகள் பரவ தாங்கள் காரணமாக இருக்காமல், பிரபலங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பு.
credit ns7.tv