செவ்வாய், 25 ஜூன், 2019

ஆண்டிகுவாவில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்ஸிக்கு நெருக்கடி! June 25, 2019


Image
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்திய அரசால் மிகவும் தேடப்படும் நபர் மெகுல் சோக்ஸி, 4000 கிளைகளுக்கு மேல் கொண்ட கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் இவர். 
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் 14,000 கோடி ரூபாயை போலி ஆவணங்கள் அளித்து மோசடி செய்த விவகாரத்தில் தேடப்படும் நீரவ் மோடியின் மாமா தான் மெகுல் சோக்ஸி. நீரவ் மோடி இங்கிலாந்திலும், மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா & பர்புடா நாட்டிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவாவில் குடியுரிமை பெற்றுள்ளார். இவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை ராஜாங்க மற்றும் நீதித்துறை ரீதியாக கையாண்டு வருகிறது இந்திய அரசு.
இந்நிலையில் மெகுல் சோக்ஸி குறித்து கருத்து தெரிவித்த ஆண்டிகுவா பிரதமர் கஸ்டன் பிரவுனி, மெகுல் சோக்ஸியின் குடியுரிமை திரும்பப் பெறுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நிதி மோசடிகளில் ஈடுபட்ட கிரிமினல்களை பாதுகாப்பது ஆண்டிகுவாவில் நோக்கம் அல்ல, தன்னிலை குறித்து விளக்கமளிக்க அவருக்கு சட்டரீதியிலான வாய்ப்பு உள்ளது, ஆனால் அதன் பின்னர் மெகுல் சோக்ஸியின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர் இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவார் என்று கஸ்டன் பிரவுனி உறுதிபட தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிய நேரத்தில் மெகுல் சோக்ஸி தனது இந்திய பாஸ்போர்டை திரும்பக் கொடுத்துவிட்டு ஆண்டிகுவாவில் குடியுரிமை பெற்று அங்கு குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நீரவ் மோடி முதல் குற்றவாளியாவார். மெகுல் சோக்ஸி இரண்டாம் குற்றவாளியாக உள்ளார்.