செவ்வாய், 25 ஜூன், 2019

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதற்கு வைகோ கண்டனம்..! June 25, 2019


Image
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் 20 ஆம் தேதி கர்நாடக அரசு, கர்நாடகாவின் வறட்சியை சமாளிக்கவும், குடிநீர் பிரச்னையைத் தீர்க்கவும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது எனவும் மேகதாதுவில் தடுப்பு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், உபரி நீர் கூட மேட்டூருக்கு வரக்கூடாது என்பதில் கர்நாடகா மாநிலம் மூர்க்கத்தனமாக செயல்படுவது கண்டனத்துக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளார். 
மக்கள் எதிர்ப்புகளை மீறி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, தற்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க முனைந்திருப்பது தமிழகத்தைப் பாலைவனமாக்கும் வஞ்சக நோக்கம் ஆகும் எனவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கர்நாடகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 
credit : ns7.tv