உக்கிரமாக கொளுத்தி வரும் கோடை வெப்பம் இன்னமும் தனியாமல் மேலும் மேலும் அதிகரித்தே வருகிறது. தமிழகம் உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது.
பீகார் மாநிலத்தின் கயா, அவுரங்காபாத், நவாதா மாவட்டங்களின் பெரும்பான்மையான பகுதிகளில் வெப்பம் கடுமையாக உள்ளது. இயல்பாகவே 45 டிகிரி (113 டிகிரி ஃபாரன்ஹீட்) செல்சியஸ் அங்கு பதிவாகி வருகிறது.
பகல் நேரத்தில் வெப்ப அலைகள் கடுமையாக நிலவி வருவதன் காரணமாக இதுவரை அதிகாரப்பூர்வமாக 117 பேர் வெப்பத்தின் காரணமாக பலியாகியுள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கை 180க்கும் அதிகம் என்றே கூறப்படுகிறது. மருத்துவமனைகளிலும் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெப்பம் இன்னமும் தனியாததாலும் பொதுமக்கள் நலன் கருதியும் கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மாவட்ட நீதிபதி அபிஷேக் சிங் பிறப்பித்துள்ளார்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்துவிதமான அரசு / அரசு சாரா கட்டட பணிகள், ஊரக வேலை பணிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் யாரும் கூட்டமாக சேரக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீகாரில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் வரும் ஜூன் 22ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
வெப்பத்தால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் மரணமடைந்தவர்களின் இறுதி சடங்கிற்கு கூடுதலாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.